WPL 2023: நொடிக்கு நொடி பரபரப்பு; கிரேஸ் ஹேரிஸ் அதிரடியில் யுபி வாரியர்ஸ் த்ரில் வெற்றி!
குஜராத் ஜெயண்ட்ஸுக்கு எதிரான மகளிர் பிரீமியர் லீக் ஆட்டத்தில் யுபி வாரியர்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது.
மகளிருக்கான பிரீமியர் லீக் தொடரின் முதல் சீசன் நேற்று பிரம்மாண்டமாக தொடங்கியது. இதில் இன்று நடைபெற்ற 3ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் - யுபி வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி ன. இதில் டாஸ் வென்ற குஜராத் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது.
அதன்படி அந்த அணிக்கு மேகனா - ஷோஃபியா டங்க்லி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டங்க்லி 13 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையி அதிரடியாக விளையாடிய மேகனாவும் 24 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். இதனையடுத்து களமிறங்கிய சதர்லேண்ட், சுஷ்மா வர்மா ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர்.
Trending
பின்னர் ஜோடி சேர்ந்த ஹர்லீன் டியோல் - ஆஷ்லே கார்ட்னர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை சீரான வேகத்தில் உயர்த்தினர். அதன்பின் அதிரடியாக விளையாட முயன்ற கார்ட்னர் 25 ரன்களுக்கு எதிர்பாராத விதமாக விக்கெட்டை இழந்தார். மறுமுனையில் அதிரடியாக விளையாடிய ஹர்லின் தியோல் 32 பந்துகளில் 46 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.
இறுதியில் ஹேமலதா 21 ரன்களையும், ஸ்நே ரானா 9 ரன்களையும் சேர்த்து அணிக்கு உதவினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் குஜாராத் ஜெயண்ட்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்களைச் சேர்த்தது. யுபி அணி தரப்பில் தீப்தி சர்மா, சோபி எக்லெஸ்டோன் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய யுபி அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. கேப்டன் அலிசா ஹீலி 7 ரன்களில் ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க வீராங்கனை 5 ரன்களிலும், அடுத்து வந்த தஹ்லியா மெக்ராத் முதல் பந்திலேயும் நடையைக் கட்டி எமாற்றமளித்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த கிரன் நவ்கிரே - தீப்தி சர்மா இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் தீப்தி சர்மா 11 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கிரன் நவ்கிரே அரைசதம் கடந்து அசத்தினார். அதன்பின் 43 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 53 ரன்களைச் சேர்த்திருந்த கிரன் நவ்கிரேவும் விக்கெட்டை இழந்தார்.
பின்னர் கிரேஸ் ஹேரிஸ் ஒருமுனையில் பவுண்டரியும் சிக்சர்களுமாக விளாச மறுபக்கம் களமிறங்கிய சிம்ரன் சிகா, தேவிகா வைத்யா ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதையடுத்து வந்த சோபி எக்லஸ்டோனும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, யுபி வாரியர்ஸ் அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.
கடைசி ஓவரை சதர்லேண்ட் வீச, முதல் பந்தையே கிரேஸ் ஹேரிஸ் சிக்சருக்கு விளாசி ஆட்டத்தின் சுவாரஸ்யத்தைக் கூட்டினார். அடுத்த பந்து ஒயிடாகவும், இரண்டாவது பந்தில் 2 ரன்களையும், 3ஆவது மற்றும் 4ஆவது பந்தை பவுண்டரிக்கு பறக்கவிட்டு அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றதுடன், 25 பந்துகளில் தனது அரைசதத்தையும் பதிவுசெய்தார். அதன்பின் 5ஆவது பந்தை சிக்சருக்கு பறக்கவிட்டு ஆட்டத்தை முடித்தார்.
இதன்முலம் யுபி வாரியர்ஸ் அணி 19.5 ஓவர்களில் இலக்கை எட்டி 3 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் ஜெயண்ட்ஸை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இதில் இறுதிவரை அதிரடியாக விளையாடிய கிரேஸ் ஹேரிஸ் 26 பந்துகளில் 7 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 59 ரன்களைச் சேர்த்து அசத்தினார். அதேசமயம் குஜராத் ஜெயண்ட்ஸ் தரப்பில் கிம் கார்த் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
Win Big, Make Your Cricket Tales Now