
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதலாம் ஆண்டு சீசன் விறுவிறுப்பு சற்றும் பஞ்சமில்லாமல் ரசிகர்களுக்கு விருந்துபடைத்து வருகிறது. அதிலும் இதில் 3 போட்டிகள் மட்டுமே முடிந்துள்ள நிலையில் ஒவ்வொரு போட்டியிலும் அதிரடி மற்றும் சுவாரஸ்யத்திற்கும் பஞ்சமில்லாமல் நடந்து வருகிறது.
இதில் இன்று நடைபெற்று வரும் 4ஆவது லீக் ஆட்டத்தில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆர்சிபி அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு ஸ்மிருதி மந்தனா - சொபி டிவைன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் 16 ரன்களில் டிவைன் விக்கெட்டை இழக்க, திஷா கசத் ரன்கள் ஏதுமின்றியும் ஆட்டமிழக்க, பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஸ்மிருதி மந்தனா 23 ரன்களில் விக்கெட்டை இழந்து நடையைக் கட்டினார்.