
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 17ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி விளையாடிய அந்த அணிக்கு கேப்டன் மெக் லெனிங் - ஷஃபாலி வர்மா இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் இருவரும் அதிரடியாக தொடங்கியதுடன், முதல் விக்கெட்டிற்கு 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். அதன்பின் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என 23 ரன்கள் எடுத்த நிலையில் ஷஃபாலி வர்மா விக்கெட்டை இழக்க, அவரைத்தொடந்து 5 பவுண்டரிகளுடன் 29 ரன்களைச் சேர்த்த நிலையில் மெக் லெனிங்கும் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் இணைந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் - அலிஸ் கேப்ஸி இணை அதிரடியான ஆட்டத்தை தொடர்ந்தனர்.
இதில் அடுத்தடுத்து பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாசிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் 26 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அவருக்கு துணையாக விளையாடிய அலிஸ் கேப்ஸியும் அதிரடியாக விளையாட இருவரும் இணைந்து 97 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். பின்னர் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் 8 பவுண்டரி, ஒரு சிக்சர் என 58 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார்.