
மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூபிஎல்) தொடரின் இரண்டாவது சீசன் கலை நிகழ்ச்சிகளுடன் இன்று(பிப்.23) கோலாகலமாக தொடங்கியது. இதில் இன்று நடைபெற்ற முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து, மெக் லெனிங் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு கேப்டன் மெக் லெனிங் - ஷஃபாலி வர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஷஃபாலி வர்மா வெறும் ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் மெக் லெனிங்குடன் இணைந்த் அலிஸ் கேப்ஸி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மெக் லெனிங் 31 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த அலிஸ் கேப்ஸி - ஜெமிமா ரோட்ரிக்ஸ் இணை அதிரடியாக விளையாடி பவுண்டரிகளாக விளாசித்தள்ளினர்.
இதில் அலிஸ் கேப்ஸி தனது அரைசதத்தையும் பதிவுசெய்து மிரட்டினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த அலிஸ் கேப்ஸி 9 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 75 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்து பெவிலியனுக்குத் திரும்பினார். அவரைத்தொடர்ந்து மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 5 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 42 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.