
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 13ஆவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து மும்பை இந்தியன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது. பெங்களூருவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணிக்கு யஷ்திகா பாட்டியா-ஹீலி மேத்யூஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 35 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் யஷ்திகா பாட்டியா 11 ரன்னில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து ஹீலி மேத்யூஸும் 22 ரன்களுடன் நடையைக் கட்டினார். பின்னர் ஜோடி சேர்ந்த நாட் ஸ்கைவர் பிரண்ட் - ஹர்மன்ப்ரீத் கவுர் இணை ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடினார். இதில் நாட் ஸ்கைவர் பிரண்ட் 18 ரன்னிலும், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 22 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர்.
அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய சஜீவன் சாஜனா 5 ரன்களுக்கும் அமெலியா கெர் 17 ரன்களுக்கும், கமலினி ஒரு ரன்னிலும், சமஸ்கிருதி குப்தா 3 ரன்னிலும் என ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இருப்பினும் இப்போட்டியில் இறுதிவரை களத்தில் இருந்த அமஞ்ஜோத் கவுர் 17 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 123 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜெஸ் ஜோனசன் மற்றும் மின்னு மணி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.