
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்த எட்டு அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் முன்னேறி அசத்தியுள்ளன. இதையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இறுதிப்போட்டி இன்று மும்பையில் உள்ள பிரபோர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து மும்பை இந்தியன்ஸை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு யஷ்திகா பாட்டியா மற்றும் ஹீலி மேத்யூஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஹீலி மேத்யூஸ் 3 ரன்களிலும், யஷ்திகா பாட்டியா 8 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் நாட் ஸ்கைவர் பிரண்ட் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர்.
ஒருகட்டத்திற்கு மேல் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்மன்ப்ரீத் கவுர் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்து அசத்தினார். இதன் மூலம் இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டிற்கு 89 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், நாட் ஸ்கைவர் பிரண்ட் 30 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய எமெலியா கெர் 2 ரன்களிலும், சஜீவன் சஞ்சனா ரன்கள் ஏதுமின்றியும் என ஆட்டமிழக்க, அதிரடியாக விளையாடி வந்த ஹர்மன்ப்ரீத் கவுரும் 8 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 66 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.