WTC 2023 Final: இமாலய இலக்கை நிர்ணயித்த ஆஸி; தொடக்கத்திலேயே தடுமாறும் இந்தியா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி ஷுப்மன் கில்லின் விக்கெட்டை இழந்துள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டனிலுள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் மூன்றாம் நாளான நேற்று ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 123 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. மார்னஸ் லபுஷேன் 41 ரன்கள், கேமரூன் கிரீன் 7 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில், இன்று நான்காம் நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே லபுஷாக்னே 41 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின், கேமரூன் கிரினுடன் ஜோடி சேர்ந்தார் அலெக்ஸ் கேரி. இந்த இணை நிதானமாக விளையாடியது. கேமரூன் கிரீன் 25 ரன்கள் எடுத்து ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன்பின், மிட்செல் ஸ்டார்க் களமிறங்கினார்.
Trending
சிறப்பாக விளையாடிய அலெக்ஸ் கேரி அரை சதம் அடித்தார். மறுமுனையில் அவருடன் பேட் செய்த மிட்செல் ஸ்டார்க் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருப்பினும், அவர் 41 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய பாட் கம்மின்ஸ் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். 8 விக்கெட்டுகளை இழந்து 270 ரன்கள் எடுத்திருக்க ஆஸ்திரேலிய அணி டிக்ளேர் செய்தது.
அலெக்ஸ் கேரி 66 ரன்களுடன் களத்தில் இருந்தார். இந்திய அணியின் தரப்பில் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், முகமது ஷமி மற்றும் உமேஷ் யாதவ் தலா 2 விக்கெட்டுகளையும், முகமது ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். இதன்மூலம், இந்திய அணியின் வெற்றிக்கு 444 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா.
இதையடுத்து இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா - ஷுப்மன் கில் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் 18 ரன்களை எடுத்திருந்த ஷுப்மன் கில், கேமரூன் க்ரீனின் அபாரமான கேட்சின் மூலம் ஆட்டமிழந்தார். இதனால் நான்காம் நாள் தேநீர் இடைவேளையின் போது இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 41 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதில் ரோஹித் சர்ம 22 ரன்களுடன் களத்தில் உள்ளார். இதையடுத்து 403 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்திய அணி விளையாடவுள்ளது. அதேசமயம் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகளைக் கைப்பற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now