உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் வெளியீடு; இந்தியாவை பின்னுக்கு தள்ளியது ஆஸ்திரேலியா!
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியளில் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது.
பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்று 3-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணியை வைட் வாஷ் செய்து அசத்தியுள்ளது.
இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியஷிப் தொடரின் புள்ளிப்பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் பாகிஸ்தான் அணியை மூன்று போட்டிகளிலும் எளிதாக வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை பெற்றுள்ளது. கடந்த இரு நாட்கள் முன்பு தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி முதல் இடத்தில் இருந்த இந்தியா, இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டு இருக்கிறது.
Trending
2023 - 2025 காலகட்டத்திற்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அங்கமாக ஒவ்வொரு அணியும் டெஸ்ட் தொடர்களில் பங்கேற்று வருகின்றன. இதில் இந்தியா இதுவரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுடன் மொத்தமாக ஐந்து டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று இருக்கிறது. அதன் முடிவில் 2 வெற்றிகள், ஒரு டிரா, ஒரு தோல்வியை சந்தித்து இருக்கிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை பொறுத்தவரை புள்ளிகளை விட வெற்றி சதவீதத்துக்கு தான் முக்கியத்துவம் அளிக்கப்படும். அந்த வரிசையில் தான் அணிகள் வரிசைப்படுத்தப்படும். அந்த வகையில் இந்தியா 54.16 சதவீத வெற்றியை கொண்டு இரண்டாம் இடத்தில் உள்ளது.
ஆஸ்திரேலிய அணி இதுவரை ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட பாகிஸ்தான் டெஸ்ட் தொடர்களில் பங்கேற்று 5 வெற்றிகள், 2 தோல்விகள், ஒரு டிரா என 56.25 சதவீத வெற்றியுடன் முதல் இடத்தில் உள்ளது. இந்தியாவை விட கூடுதலாக 2 வெற்றி சதவீதத்தை கொண்டுள்ளது ஆஸ்திரேலியா. பாகிஸ்தான் அணி ஒரு போட்டியில் வென்று இருந்தாலோ, டிரா செய்து இருந்தாலோ ஆஸ்திரேலியா முதல் இடத்தை பிடித்து இருக்காது. இந்தியாவும் முதல் இடத்தில் நீடித்து இருக்கும்.
தென் ஆப்பிரிக்கா, இந்தியா உடனான இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் ஒரு வெற்றி, ஒரு தோல்வி பெற்று 50 சதவீத வெற்றியுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. நியூசிலாந்து மற்றும் வங்கதேச அணியும் 50 சதவீத வெற்றியுடன் மூன்றாம் இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளன. அடுத்த இடங்களில் பாகிஸ்தான் 36.66 வெற்றி சதவீதம், வெஸ்ட் இண்டீஸ் 16.67 வெற்றி சதவீதம், இங்கிலாந்து 15 வெற்றி சதவீதம், இலங்கை - 0 வெற்றி சதவீதத்துடன் உள்ளன.
Win Big, Make Your Cricket Tales Now