சர்வதேச கிரிக்கெட்டில் கேப்டனாக தனித்துவ சாதனை படைத்த டெம்பா பவுமா!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் முதன் பத்து போட்டிகளில் தோல்வியையே சந்திக்காத கேப்டன் எனும் சாதனையை தென் ஆப்பிரிக்காவின் டெம்பா பவுமா படைத்துள்ளார்.

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியின் மூலம் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார்.
லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் டெம்பா பவுமா தலைமையிலான தென் அப்பிரிக்க அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், ஐசிசி தொடர்களில் முதல் முறையாக சாம்பியன் பட்டத்தையும் வென்று தங்கள் மீதான விமர்சனங்களுக்கும் பதிலடியைக் கொடுத்துள்ளது.
இந்நிலையில் இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றியை ஈட்டியதன் மூலம் அந்த அணியின் கேப்டன் டெம்பா பவுமா புதிய சாதனை ஒன்றையும் படைத்துள்ளார். அதன்படி டெஸ்ட் கேப்டனாக முதல் பத்து போட்டிகளில் அதிக போட்டிகளில் வென்றதன் அடிப்படையில் பவுமா கூட்டாக முதல் இடத்தை அடைந்துள்ளார். பவுமா கேப்டனாக பத்து போட்டிகளில் ஒன்பது போட்டிகளில் வென்றுள்ளார், ஒன்று டிராவாகியுள்ளது. இந்தப் பட்டியலில், இங்கிலாந்தின் பெர்சி சாப்மேனை அவர் சமன் செய்துள்ளார்.
இருப்பினும் பெர்சி சாப்மேன் தனது முதல் பத்து டெஸ்ட் போட்டிகளில் ஒரு போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளார். இதன் மூலம் முதல் 10 டெஸ்ட் போட்டிகளில் தோவியையே சந்திக்காத கேப்டன் எனும் சாதனையை டெம்பா பவுமா தன்வசப்படுத்தியுள்ளார். இதுதவிர்த்து ஒரு கேப்டனாக முதல் பத்து டெஸ்ட் போட்டிகளில் அதிக டாஸ்களை வென்றதன் அடிப்படையில் பவுமா கூட்டாக முதலிடத்தில் உள்ளார். அவர் பத்து போட்டிகளில் 9 முறை டாஸ் வென்று அசத்தியுள்ளார்.
இதற்கு முன் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கோலின் கவுட்ரியின் சாதனையை சமன் செய்துள்ளார். இதற்கு முன் கோலின் கவுட்ரி தொடர்ச்சியாக 9 டாஸை வென்றதே சாதனையாக இருந்த நிலையில் அதனை பவுமா சமன்செய்துள்ளார். இதுதவிர்த்து தென் ஆப்பிரிக்க அணிக்காக ஹான்சி குரோன்ஜேவுக்கு பிறகு ஐசிசி கோப்பையை வென்ற கேப்டன் எனும் பெருமையையும் டெம்பா பவுமா பெற்றுள்ளார்.
இப்போட்டி குறித்து பேசினால், டாஸை இழந்து முலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 212 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில், பின்னர் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 138 ரன்களில் சுருண்டது. இதையடுத்து 74 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 207 ரன்களுக்கு சுருண்டது. இதனால் தென் ஆப்பிரிக்க அணி 282 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
Also Read: LIVE Cricket Score
அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் ஐடன் மார்க்ரம் சதமடித்து அசத்தியதுடன் 136 ரன்களையும், கேப்டன் டெம்பா பவுமா 66 ரன்களையும் சேர்த்ததன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிகரமாக இலக்கை எட்டியதுடன், ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தையும் வென்று சாதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now