
நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கெதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அனைவரது கவனத்தையும் யஷஸ்வி ஜெய்வால் ஈர்த்துள்ளார். அதிலும் குறிப்பாக விசாகப்பட்டினத்தில் விளையாடிய இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதலாவது இரட்டை சதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார்.
இந்நிலையில் ராஜ்கோட்டில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் வெறும் 10 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்த யஷஸ்வி ஜெய்ஸ்வால், இப்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது இரண்டாவது இரட்டை சதத்தையும் பதிவுசெய்து அசத்தினார்.
இப்போட்டியில் இரட்டை சதம் அடித்ததன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இளம் வயதில் இரண்டு இரட்டை சதங்களை விளாசிய மூன்றாவது வீரர் எனும் பெருமை ஜெய்ஸ்வாலுக்கு கிடைத்துள்ளது. மேலும், இப்போட்டியில் 214 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்த இன்னிங்ஸில் 14 பவுண்டரி, 12 சிக்சர்களை விளாசினார். இதன்மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்சர்களை விளாசிய வீரர் எனும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரமின் சாதனையை சமன்செய்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.