
ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி பெர்த்தில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 22) நடைபெறுகிறது. இந்திய நேரப்படி இந்த போட்டி காலை 7.50 மணிக்கு தொடங்கும். இதற்காக இரு அணி வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணிக்காக விளையாட இருக்கும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் உலக சாதனை படைக்கு வாய்ப்பை பெற்றுள்ளார். அந்தவகையில் இந்தப் போட்டியில் ஜெய்ஸ்வால் இரண்டு சிக்ஸர்களை அடித்தால், ஒரு வருடத்தில் டெஸ்டில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர் என்ற உலக சாதனையைப் படைப்பார். ஜெய்ஸ்வால் இந்த ஆண்டு விளையாடிய 11 டெஸ்டில் 21 இன்னிங்ஸில் 32 சிக்ஸர்களை அடித்துள்ளார்.
முன்னதாக கடந்த 2014ஆம் ஆண்டு நியூசிலாந்து அணியின் அதிரடி வீரர் பிராண்டன் மெக்கலம் 33 சிக்ஸர்களை விளாசியதே டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு ஆண்டில் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்ஸராக இருந்து வருகிறது. இந்நிலையில் இத்தொடரின் மூலம் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அவரது சாதனையை முடியடிக்கும் வாய்ப்பினை பெற்றுள்ளார்.