
இந்திய அணியின் நட்சத்திர தொடக்க வீரர் அந்தஸ்த்தை பெற்றுள்ளவர் யஷஸ்வி ஜெய்ஸ்வால். இவர் கடந்த 2023ஆம் ஆண்டு இந்திய அணிக்காக டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அறிமுகமானார். மேற்கொண்டு இந்த ஆண்டு இந்திய ஒருநாள் அணிக்காகவும் அறிமுகமானர்.
இந்திய அணியின் மிக முக்கிய தொடக்க வீரராக திகழ்வும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் உள்ளூர் போட்டிகளில் மும்பை அணிக்காகவும், ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் இந்திய அணிக்கு தேர்வானார். பின் டெஸ்ட் கிரிக்கெட்டில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் ஒரு வருடத்தில் 1000 ரன்களுக்கு மேல் அடித்ததுடன், உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களுக்கு எதிராகவும் அதிரடியாக விளையாடி கவனத்தை ஈர்த்துள்ளர்.
இந்நிலையில் தான் அவர் மும்பை அணியில் இருந்து விலகி கோவா அணிக்காக விளையாடபோவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். மேலும் அவர் மும்பை கிரிக்கெட் சங்கத்திடம் இதற்கான தடையில்லா சான்றிதழையும் கேட்டிருந்தார். மும்பை அணியில் ஏற்பட்ட சலசலப்பின் காரணமாகவும், கோவா அணியை வழிநடத்தும் வாய்ப்பு கிடைத்ததன் காரணமாகவும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்த முடிவை எடுத்ததாக கூறப்பட்டிருந்தது.