உலகக்கோப்பை அஸ்வின் விளையாடுவாரா? - ரோஹித் சர்மா பதில்!
கடந்த ஒன்றரை வருடங்களாக ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடவில்லை என்பதற்காக அஸ்வின் போன்ற வீரரிடமிருந்து நீங்கள் க்ளாஸ் மற்றும் அனுபவத்தை எடுக்க முடியாது என ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தயாராகி வரும் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. அதை விட இத்தொடரில் சுமார் 2 வருடங்கள் கழித்து கம்பேக் கொடுத்த ரவிச்சந்திரன் அஸ்வின் 4 விக்கெட்டுகள் எடுத்து சிறப்பாக செயல்பட்டுள்ளார்.
முன்னதாக 2023 உலகக் கோப்பைக்காக அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், குல்தீப் யாதவ் ஆகிய மூவருமை இடது கை அல்லது லெக் ஸ்பின்னர்களாக இருக்கிறார்கள். அதனால் எதிரணியில் இருக்கும் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு சவாலை கொடுக்க ஆஃப் ஸ்பின்னர் தேவை என்ற நோக்கத்தில் ஆசிய கோப்பையில் காயமடைந்த அக்ஸர் படேலுக்கு பதிலாக ரவிச்சந்திரன் அஸ்வின் சுமார் 2 வருடங்கள் கழித்து இத்தொடரில் தேர்வு செய்யப்பட்டார்.
Trending
அந்த வாய்ப்பை பொன்னாக மாற்றிய அஸ்வின் 4 விக்கெட்டுகளை எடுத்து சில சாதனைகளை படைத்து தன்னுடைய அனுபவத்தை காட்டி சாம்பியன் வீரர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். அதனால் 2023 உலகக் கோப்பை அணியில் ரிசர்வ் வீரராக மட்டும் தேர்வாகியுள்ள அவருக்கு நேரடியாக வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு தமிழக ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலிய தொடரில் அசத்திய அஸ்வினுக்கு ஒருவேளை அக்சர் படேல் காயத்திலிருந்து குணமடையாமல் வெளியேறும் பட்சத்தில் உலகக்கோப்பை அணியில் வாய்ப்பு கொடுக்கப்படும் என்று ரோஹித் சர்மா மறைமுகமாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய ரோஹித் சர்மா, “அவரிடம் கிளாஸ் இருக்கிறது. மேலும் அனுபவத்தை கொண்டுள்ள அவருக்கு அழுத்தத்தை எப்படி கையாள வேண்டும் என்பதும் தெரியும். குறிப்பாக கடந்த ஒன்றரை வருடங்களாக ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடவில்லை என்பதற்காக அவரை போன்ற வீரரிடமிருந்து நீங்கள் க்ளாஸ் மற்றும் அனுபவத்தை எடுக்க முடியாது. கடந்த 2 போட்டிகளில் அவர் எந்தளவுக்கு சிறப்பாக பந்து வீசினார் என்பதை நாம் பார்த்தோம்.
எனவே தன்னுடைய கையில் நிறைய வேரியேஷன்களையும் வைத்துள்ள அவருக்கு ஏதேனும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நாங்கள் அதை பார்ப்போம். மேலும் தற்போதைய சூழ்நிலைகள் ஒரு திசையை நோக்கி செல்லும் நிலையில் அவர் எங்களுக்காக சிறப்பாக செயல்பட்டுள்ளார். இதனால் நாங்கள் பேக்-அப் வீரர்களை தயாராக வைத்துள்ளோம். நாங்களும் அவருக்கு உலகக் கோப்பைக்கு முன்பாக போதுமான நேரத்தையும் வாய்ப்பையும் வழங்கியுள்ளோம்” என்று கூறியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now