
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிகள் நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இணைந்துள்ளனர். மேற்கொண்டு டி20 அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். அதுமட்டுமின்றி இத்தொடர் முதல் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் செயல்படவுள்ளார்.
ஆனால் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய அணி மீது மிகவும் காட்டமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஏனெனில் சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டும் சில வீரர்களுக்கு இந்த அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் அதேசம் தொடர்ந்து சொதப்பிவரும், அணியில் இருந்த நீக்கப்பட்ட மற்றும் நீண்ட் நாள்களாக கிரிக்கெட் விளையாடாமல் இருந்த வீரர்கள் என ஒரு சிலருக்காக சிறப்பாக செயல்பட்ட விரர்களை அணியில் இருந்து நீக்கிய எந்தவகையில் நியாயம் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றன.
அதிலும் முக்கியமாக சர்வதேச கிரிக்கெட்டில் தனக்கு கிடைத்த அனைத்து வாய்ப்புகளிலும் சிறப்பாக செயல்பட்ட ருதுராஜ் கெய்க்வாட் இத்தொடருக்கான டி20 மற்றும் ஒருநாள் அணி என எதிலும் இடம்பிடிக்காததும் பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளது. அத்போல் இந்திய அணி கடைசியாக விளையாடிய ஒருநாள் போட்டியில் சதமடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்த சஞ்சு சாம்சனிற்கும் ஒருநாள் அணியில் இடம் கிடைக்காதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் தோர்வுகுழுவை முன்னாள் வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத் மிகக்கடுமையாக சாடியுள்ளார்.