விராட் கோலிக்கு உணர்ச்சிபூர்வமான பதிவின் மூலம் வாழ்த்து தெரிவித்த சச்சின் டெண்டுல்கர்!
இந்திய கிரிக்கெட்டுக்கு நீங்கள் வெறும் ரன்கள் மட்டும் கொடுக்கவில்லை, ஆர்வமுள்ள புதிய தலைமுறை ரசிகர்களையும் வீரர்களையும் அதற்குக் கொடுத்திருக்கிறீர்கள் என்று விராட் கோலிக்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்திய டெஸ்ட் அணியின் ஜாம்பவான் பேட்டரும் முன்னாள் கேப்டனுமான விராட் கோலி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து இன்று ஓய்வை அறிவித்துள்ளார். முன்னதாக பிசிசிஐ அவரின் முடிவை மறுபரிசீலனை செய்யும் படியும் கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியான நிலையில், இன்று அவருடைய ஓய்வு முடிவானது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணிக்காக கடந்த 2011ஆம் ஆண்டு அறிமுகமான விராட் கோலி இதுவரை 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 46.85 சராசரியாக 9230 ரன்களை எடுத்துள்ளார். இதில் அவர் 30 சதங்களையும், 31 அரைசதங்களையும் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவரது தலைமையின் கீழ் இந்திய டெஸ்ட் அணி சர்வதேச கிரிக்கெட்டில் புதிய உச்சங்களை எட்டியதுடன் பல்வேறு சாதனைகளையும் படைத்தது என்பதை எவறாலும் மறுக்க முடியாது.
இந்நிலையில் விராட் கோலியின் இந்த ஓய்வு முடிவு பலரையும் ஆச்சரியத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. இதனையடுத்து பல்வேறு தரப்பில் இருந்தும் விராட் கோலிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இதில் இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் விராட் கோலிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதுடன், தனது டெஸ்ட் ஓய்வு நாளை நினைவு கூர்ந்துள்ளார் அவருக்காக ஒரு சிறப்புப் பதிவைப் பகிர்ந்துள்ளார்.
விராட் கொலியின் ஓய்வு குறித்து சச்சின் டெண்டுல்கர் தனது எக்ஸ் பதிவில், 'நீங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும்போது, 12 ஆண்டுகளுக்கு முன்பு எனது கடைசி டெஸ்டில் நீங்கள் செய்த சிந்தனைமிக்க சைகை எனக்கு நினைவுக்கு வருகிறது. உங்கள் மறைந்த தந்தையின் சார்பாக எனக்கு ஒரு நூலைப் பரிசளிக்க முன்வந்தீர்கள். அதை ஏற்றுக்கொள்வது எனக்கு மிகவும் தனிப்பட்ட ஒன்று, ஆனால் அந்த சைகை மனதைத் தொடும் விதமாகவும் இருந்தது, அன்றிலிருந்து அது என்னுடன் நிலைத்திருக்கிறது.
Also Read: LIVE Cricket Score
எனக்கு பதிலுக்கு வழங்க எந்த நூலும் இல்லை என்றாலும், உங்களுக்கு எனது ஆழ்ந்த பாராட்டுகளும் வாழ்த்துக்களும் உள்ளன என்பதை அறிந்து கொள்ளுங்கள். உங்கள் உண்மையான மரபு, எண்ணற்ற இளம் கிரிக்கெட் வீரர்களை மேம்படுத்த ஊக்குவித்து வருகிறது. உங்களுடைய டெஸ்ட் வாழ்க்கை எவ்வளவு அற்புதமானது. நீங்கள் இந்திய கிரிக்கெட்டுக்கு வெறும் ரன்கள் மட்டும் கொடுக்கவில்லை, ஆர்வமுள்ள புதிய தலைமுறை ரசிகர்களையும் வீரர்களையும் அதற்குக் கொடுத்திருக்கிறீர்கள். மிகவும் சிறப்பான டெஸ்ட் வாழ்க்கைக்கு என்னுடைய வாழ்த்துக்கள்” என்று பதிவுசெய்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now