
உலக கிரிக்கெட் ரசிகர்களின் மொத்த கவனமும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெற இருக்கும் 13ஆவது ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் மீது திரும்பி இருக்கிறது. உலகக் கோப்பை போட்டிகள் தொடங்குவதற்கு இரண்டு மாதங்களுக்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில் கிரிக்கெட் ரசிகர்கள் இந்த மிகப்பெரிய திருவிழாவிற்காக தயாராகி வருகின்றனர் .
மேலும் ஒவ்வொரு நாடும் உலக கோப்பையை கைப்பற்ற தங்கள் அணியை பலமாக செதுக்கி வருகின்றன. உலகக் கோப்பை போட்டிக்கு விளையாடும் வீரர்களின் பட்டியலை செப்டம்பர் 5ஆம் தேதி சமர்ப்பிக்க வேண்டும் என ஐசிசி உலக கோப்பையில் பங்கேற்கும் நாடுகளுக்கு அறிவுறுத்தி இருக்கிறது. மேலும் முதல் பட்டியலில் இடம் பெற்றுள்ள வீரர்களை மாற்றுவதற்குரிய கடைசி தேதி செப்டம்பர் 27 ஆகும்.
2011 ஆம் ஆண்டிற்கு பிறகு 12 வருடங்கள் கழித்து இந்தியாவில் உலகக்கோப்பை நடைபெற இருக்கிறது. கடைசியாக நடைபெற்ற உலகக் கோப்பையை மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது. அதன் பிறகு நடைபெற்ற இரண்டு உலகக் கோப்பை போட்டிகளிலும் இந்தியா அரை இறுதியில் தோற்று வெளியேறியது. இந்த முறை உலக கோப்பை போட்டிகள் இந்தியாவில் நடைபெற இருப்பதால் பற்றாணிகளை விட இந்தியாவிற்கு சற்று சாதகமான சூழலே நிலவுகிறது.