
ஆஃப்கானிஸ்தான் அணியானது ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரின் முதல் போட்டியானது இன்று (டிசம்பர் 11) ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் செதிகுல்ல அடால் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ரஹ்மனுல்லா குர்பாஸ் ரன்கள் ஏதுமின்றியும், செதிலுகுல்லா அடால் ஒரு ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய முகமது இஷாக்கும் ஒரு ரன்னுடன் பெவிலியன் திரும்பினார். அதேசயம் அதிரடியாக விளையாட முயன்ற ஹஸ்ரதுல்லா ஸஸாய் 20 ரன்களிலும், அஸ்மதுல்லா ஒமர்ஸாய் 13 ரன்களில் விக்கெட்டை இழந்தனர்.
அதன்பின் ஜோடி சேர்ந்த கரிம் ஜானத் - முகமது நபி இணை பொறுப்புடன் விளையாடி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர். இதில் கரிம் ஜானத் அரைசதம் கடந்தார். அதேசமயம் மறுபக்கம் அரைசதத்தை நெருங்கிய முகமது நபி 44 ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும் இறுதிவரை களத்தில் இருந்த கரிம் ஜானத் 54 ரன்களைச் சேர்க்க, ஆஃப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 144 ரன்களை மட்டுமே சேர்த்தது. ஜிம்பாப்வே அணி தரப்பில் ரிச்சர்ட் ந்ங்கரவா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.