
ஆஃப்கானிஸ்தான் அணியானது தற்சமயம் ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று வரும் டி20 தொடரின் முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளன.
இதையடுத்து ஜிம்பாப்வே மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று (டிசம்பர் 14) ஹராரேவில் உள்ள ஸ்போர்ட்ஸ் கிளப் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற் ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு மருமணி - பிரையன் பென்னட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் மருமணி 6 ரன்னில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
அவரைத்தொடர்ந்து 13 ரன்னில் தியான் மேயர்ஸ் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பிரையன் பென்னட்டும் 31 ரன்னில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் களமிறங்கிய வெஸ்லி மதவெரே 21, சிக்கந்தர் ரஸா 6, ஃபராஸ் அக்ரம் 6 என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களில் வெலிங்டன் மஸகட்ஸா 17 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் ஜிம்பாப்வே அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஃப்கான் அணி தரப்பில் ரஷித் கான் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.