
ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியானது ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயாம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளார். இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் அபிஷேக் சர்மா, ரியான் பராக் மற்றும் துருவ் ஜுரேல் உள்ளிட்ட அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு இன்னசெண்ட் கையா மற்றும் வெஸ்லி மதேவெரா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இன்னசெண்ட் கையா முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதன்பின் மதேவெராவுடன் இணைந்த பிரையன் பென்னெட் ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார். இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 36 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் 23 ரன்களில் பிரையன் பென்னெட்டும், 21 ரன்களில் வெஸ்லி மதேவெராவும் விக்கெட்டை இழந்தனர்.
அதனைத்தொடர்ந்து இணைந்த கேப்டன் சிக்கந்தர் ரஸா மற்றும் தியான் மேயர்ஸ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் உயரத்தொடங்கியது. இதில் அதிரடியாக விளையாட முயற்சித்த கேப்டன் சிக்கந்தர் ரஸா 17 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஜானதன் காம்பெல் முதல் பந்திலேயே ரன் அவுட்டாகி பெவிலியனுக்கு நடையைக் கட்ட, ஜிம்பாப்வே அணியானது 74 ரன்களில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின்னர் தியான் மெயர்ஸும் 23 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய வெலிங்டன் மஸகட்ஸாவும் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தார்.