SA vs PAK, 1st T20I: டேவிட் மில்லர், ஜார்ஜ் லிண்டே அசத்தல்; பாகிஸ்தானை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா!
தென் ஆப்பிரிக்கா அணியானது சொந்த மண்ணில் பாகிஸ்தானுக்கு அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரிலும், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரின் முதல் போட்டியானது இன்று (டிசம்பர் 10) டர்பனில் உள்ள் கிங்ஸ் மீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து பாகிஸ்தான் அணியை பந்துவீச அழைத்தது. ஆனால் தென் ஆப்பிரிக்க அணிக்கு இப்போட்டியில் எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. ஏனெனில் அணியின் தொடக்க வீரர் ரஸ்ஸி வேன்டர் டுசென் எதிர்கொண்ட முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்ப, அடுத்து களமிறங்கிய மேத்யூ பிரீட்ஸ்கியும் 8 ரன்களுடன் நடையைக் கட்டினார். இவர்களைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான ரீஸா ஹெண்ட்ரிக்ஸும் 8 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனால் தென் ஆப்பிரிக்க அணி 28 ரன்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து ஜோடி சேர்ந்த டேவிட் மில்லர் மற்றும் கேப்டன் ஹென்றிச் கிளாசென் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர். இதில் ஹென்ரிச் கிளாசென் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த் நிலையில், மறுபக்கம் டேவிட் மில்லர் சிக்ஸர்களை பறக்கவிட்டு தனது அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினார். பின்னர் 12 ரன்களில் கிளாசென் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய டோனவன் ஃபெரீராவும் 7 ரன்களில் நடையைக் கட்டினார்.
ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுபக்கம் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய டேவிட் மில்லர் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 4 பவுண்டரி, 8 சிக்ஸர்கள் என 82 ரன்களை சேர்த்து விக்கெட்டை இழந்தார். இறுதியில் ஜார்ஜ் லிண்டே 3 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 48 ரன்களையும், குவெனா மபாகா 12 ரன்களையும் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தனர். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்களைச் சேர்த்தது. பாகிஸ்தான் தரப்பில் ஷாஹீன் அஃப்ரிடி, அப்ரார் அஹ்மத் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் வகையில் நட்சத்திர வீரர் பாபர் ஆசாம் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். பின்னர் இணைந்த கேப்டன் முகமது ரிஸ்வான் - சைம் அயூப் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சைம் அயூப் 31 ரன்னில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய உஸ்மான் கானும் 9 ரன்களுடன் நடையைக் கட்டினார். இதற்கிடையில் ரிஸ்வான் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
Also Read: Funding To Save Test Cricket
ஆனால் மறுபக்கம் களமிறங்கிய தயாப் தாஹிர், ஷாஹீன் அஃப்ரிடி, இர்ஃபான் பான், அப்பாஸ் அஃப்ரிடி உள்ளிட்டோரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, இறுதிவரை போராடிய முகமது ரிஸ்வான் 5 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 74 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். இதனால் பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்களை மட்டுமே சேர்த்தது. தென் ஆப்பிரிக்க தரப்பில் ஜார்ஜ் லிண்டே 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியதுடன் 1-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்றுள்ளது.