WI vs IND, 1st Test: ஜெய்ஸ்வால், ரோஹித் அபார சதம்; வலிமையான ஸ்கோரை நோக்கி இந்தியா!
இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி ஜூலை 12ஆம் தேதி டொமினிகாவில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் இந்திய பவுலர்கள் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் விரைவாகவே வீழ்ந்தனர். குறிப்பாக அஸ்வின் மற்றும் ஜடேஜாவின் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்வதில் தடுமாறினர்.
இதனால் முதல் இன்னிங்ஸில் 64.3 ஓவரில் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது அந்த அணி. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அறிமுக வீரர் ஆலிக் அதானஸ் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து 47 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு அவுட்டாகினர். இந்தியா சார்பில் அஸ்வின் 5 விக்கெட், ஜடேஜா 3 விக்கெட், சிராஜ், ஷர்துல் தாக்குர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதன்பின், முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் சர்மா களமிறங்கினர். இருவரும் நிதானமாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் எடுத்தது.
இந்நிலையில் ஜெய்ஸ்வால் 40 ரன்களுடனும் , ரோகித் சர்மா 30 ரன்களுடனும் இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். இதில் இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் வீழாமல் பார்த்துக்கொண்டனர். இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது அறிமுக போட்டியில் அரைசதம் கடந்து அசத்தினார். அவரைத் தொடர்ந்து கேப்டன் ரோஹித் சர்மாவும் தனது அரைசதத்தைக் கடந்தார்.
அதன்பின்னும் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த இந்த இணையை பிரிக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் அணி தடுமாறியது. பின் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த யஷஸ்வி ஜெஸ்வால் தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் சதமடித்து அசத்தினார். அவரைத் தொடர்ந்து கேப்டன் ரோஹித் சர்மாவும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 10ஆவது சதம் விளாசினார்.
ஆனால் சதமடித்த அடுத்த பந்திலேயே ரோஹித் தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஷுப்மன் கில்லும் வெறும் 6 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து நடையைக் கட்டினர். அதன்பின் க்ளமிறங்கிய விராட் கோலி, யஷஸ்வியுடன் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதன்மூலம் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி இரண்டு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 312 ரன்களை குவித்துள்ளது.
இதில் அறிமுக வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 143 ரன்களுடனும், விராட் கோலி 36 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதனாஸ், வாரிகன் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். இதையடுத்து 162 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.