பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி, இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியானது இன்னிங்ஸ் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

Advertisement

இதையடுத்து பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி முல்தானில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் ஷான் மசூத் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி, பேட்டிங் செய்ய களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் அப்துல்லா ஷஃபிக் 7 ரன்களிலும், கேப்டன் ஷான் மசூத் 3 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் சைம் அயூப்புடன் இணைந்த அறிமுக வீரர் காம்ரன் குலாம் நிதான ஆட்டத்தை வெளிபடுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினார்.

Advertisement

இப்போட்டியில் தொடர்ந்து பாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இருவரும் தங்களது அரைசதங்களைப் பதிவுசெய்து அசத்தியதுடன், மூன்றாவது விக்கெட்டிற்கு 149 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர்.  அதன்பின் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சைம் அயூப் 77 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய சௌத் சகீலும் 4 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் தொடர்ந்து பொறுப்புடன் விளையாடி வந்த காம்ரன் குலாம் தனது முதல் போட்டியிலேயே சதம் விளாசி அசத்தினார்.

பின்னர் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய காம்ரன் குலாம் 11 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 118 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார்.  இதனால் பாகிஸ்தான் அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 259 ரன்களைச் சேர்த்தது.  இதனையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை ரிஸ்வான் 37 ரன்களுடனும், அகா சல்மான் 5 ரன்களுடனும் இன்னிங்ஸைத் தொடங்கினர். இதில் ரிஸ்வான் 41 ரன்களிலும், அகா சல்மான் 31 ரன்னிலும் விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய வீரர்களில் அமீர் ஜமால் 37 ரன்களையும், நோமன் அலி 32 ரன்களையும் சேர்த்தனர்.

இதன்மூலம் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 366 ரன்களைச் சேர்த்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணி தரப்பில் ஜேக் லீச் 4 விக்கெட்டுகளையும், பிரைடன் கார்ஸ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த இங்கிலாந்து அணிக்கு ஸாக் கிரௌலி - பென் டக்கெட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் கிரௌலி 27 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய ஒல்லி போப் 29 ரன்னிலும், நட்சத்திர வீரர் ஜோ ரூட் 34 ரன்களையும் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். 

ஆனாலும் மறுபக்கம் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பென் டக்கெட் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 6ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் அபாரமாக விளையாடி வந்த பென் டக்கெட் 114 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய ஹாரி புரூக் 9 ரன்னிலும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஒரு ரன்னிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 239 ரன்களை மட்டுமே சேர்த்தது. 

Advertisement

இதில் ஜேமி ஸ்மித் 12 ரன்களுடனும், பிரைடன் கார்ஸ் 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். பாகிஸ்தான் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய சஜித் கான் 4 விக்கெட்டுகளையும், நோமன் அலி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து 127 ரன்கள் பின் தங்கிய நிலையில் இங்கிலாந்து அணி நாளை மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News