ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணியை தேர்வு செய்த ஆகாஷ் சோப்ரா; கேப்டனாக கம்மின்ஸ் தேர்வு!
முன்னாள் இந்திய வீரரும் பிரபல கிரிக்கெட் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா 2024 ஆம் ஆண்டிற்கான தனது ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணியை தேர்வு செய்துள்ளார். அவர் தனது அணியில் மூன்று இந்திய வீரர்கள் மற்றும் மூன்று இங்கிலாந்து வீரர்களை சேர்த்துள்ளார். இது தவிர, இந்த அணியில் நியூசிலாந்து, இலங்கை, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒரு வீரருக்கும் இடம் கொடுத்துள்ளார்.
அந்தவகையில் ஆகாஷ் சோப்ரா தனது அணியில் இந்திய அணியின் இளம் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் இங்கிலாந்தின் அதிரடி பேட்ஸ்மேன் பென் டக்கெட் ஆகியோரை தொடக்க ஆட்டக்காரர்களாக தேர்வு செய்துள்ளார். இதில் ஜெய்ஸ்வால் 2024 ஆம் ஆண்டில் அதிக டெஸ்ட் ரன்களை எடுத்தவர்களில் இரண்டாவது இடத்தில் இருந்தார். அவர் 2024 ஆம் ஆண்டில் இந்தியாவுக்காக 15 டெஸ்ட் போட்டிகளில் 29 இன்னிங்ஸ்களில் 1478 ரன்கள் எடுத்தார்.
மறுபுறம், பென் டக்கெட் இங்கிலாந்துக்காக 17 போட்டிகளில் 32 இன்னிங்ஸ்களில் 1149 ரன்கள் எடுத்தார். இது தவிர அவர் தனது அணியில் நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன், இங்கிலாந்தின் ஜோ ரூட் ஆகியோருக்கும் இடம் கொடுத்துள்ளார். இதில் ஜோ ரூட் அற்புதமான ஃபார்மில் இருந்துள்ளார். அவர் 17 டெஸ்ட்களில் 31 இன்னிங்ஸ்களில் விளையாடி 1,556 ரன்கள் எடுத்ததன் மூலம் 2024ஆம் ஆண்டில் அதிக ரன்கள் குவித்த வீரராகவும் சாதனை படைத்துள்ளார்.
அதேசமயம் நியூசிலாந்தின் கேன் வில்லியம்சனைப் பற்றி நாம் பேசினால், அவர் 9 போட்டிகளில் 18 இன்னிங்ஸில் 50.58 சராசரியில் 1013 ரன்கள் சேர்த்துள்ளார். மேற்கொண்டு மிடில் ஆர்டரில் இங்கிலாந்தி ஹாரி ப்ரூக், இலங்கையின் கமிந்து மெண்டிஸ், பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் ஆகியோரைத் தேர்வுசெய்துள்ள ஆகாஷ் சோப்ரா, இந்திய ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவிற்கும் தனது அணியில் வாய்ப்பு வழங்கியுள்ளார்.
மேற்கொண்டு அணியின் பந்துவீச்சை பொறுத்தவரையில் ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ், தென் ஆப்பிரிக்காவின் காகிசோ ரபாடா, இந்திய அணியின் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கும் தனது அணியில் இடமளித்துள்ளார். இதில் பாட் கம்மின்ஸ் 2024 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்காக 9 போட்டிகளில் 18 இன்னிங்ஸ்களில் 37 விக்கெட்டுகளை எடுத்தார், மேலும் கடினமான காலங்களில் முக்கியமான இன்னிங்ஸ் விளையாடி 306 ரன்கள் சேர்த்தார்.
அவரது தலைமையில், ஆஸ்திரேலியா மீண்டும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இதன் காரணமாக இந்த அணியின் கேப்டனாகவும் பாட் கம்மின்ஸை ஆகாஷ் சோப்ரா தேர்ந்தெடுத்துள்ளார். அதேசமயம் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவைப் பற்றி நாம் பேசினால், கடந்த ஆண்டு 13 போட்டிகளில் 26 இன்னிங்ஸ்களில் விளையாடிய அவர் 71 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: Funding To Save Test Cricket
ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்த 2024 ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணி: யஷஸ்வி ஜெய்ஸ்வால், பென் டக்கெட், ஜோ ரூட், கேன் வில்லியம்சன், ஹாரி புரூக், கமிந்து மெண்டிஸ், முகமது ரிஸ்வான், ரவீந்திர ஜடேஜா, பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா, ககிசோ ரபாடா.