இந்திய அணியின் தேர்வு குழு தலைவராகும் அஜித் அகர்கர்!

Updated: Fri, Jun 30 2023 20:37 IST
Image Source: Google

இந்திய அணியின் கேப்டனாக சவுரவ் கங்குலி இருந்த போது, தவிர்க்க முடியாத ஆல்ரவுண்டராக வலம் வந்தவர் அஜித் அகர்கர். இந்திய அணிக்காக 191 ஒருநாள் போட்டிகளிலும், 26 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். இதன்பின்னர் ஐபிஎல் தொடரில் விளையாடி வந்த அவர், ஓய்வை அறிவித்தார். கடந்த ஐபிஎல் சீசனில் டெல்லி அணியின் துணை பயிற்சியாளராக செயல்பட்டார்.

இதனிடையே இந்திய அணியின் தேர்வுக் குழு தலைவருக்கான பதவிக்கு இரு முறை விண்ணப்பித்திருந்தார். ஆனால் அவருக்கு பதிலாக பிசிசிஐ நிர்வாகம் சேத்தன் சர்மாவை தேர்வு செய்தது. இந்த நிலையில் இந்திய அணியின் தேர்வுக் குழு தலைவராக இருந்த சேத்தன் சர்மா, தனியார் தொலைக்காட்சி நடத்திய ஸ்டிங் ஆபரேஷன் சர்ச்சையில் சிக்கினார். இதனால் தானாக முன் வந்து சேத்தன் சர்மா ராஜினாமா செய்தார்.

இதன் காரணமாக பிப்ரவரி 17ஆம் தேதி முதலே அந்தப் பதவி நிரப்பப்படாமலேயே இருந்தது. இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்ததையடுத்து, மீண்டும் தேர்வுக் குழு தலைவர் பதவி குறித்த கேள்விகள் எழுந்தன. பின்னர் ஜூன் 23ஆம் தேதி தேர்வுக் குழு தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று பிசிசிஐ அறிவித்தது.

ஆனால் தேர்வுக் குழு தலைவர் பதவிக்கு ஊதியமாக ரூ.1 கோடி வரை மட்டுமே வழங்கப்படும். ஊதியம் மிகவும் குறைவு என்பதால், முன்னாள் வீரர்கள் பலரும் ஆர்வம் காட்டவில்லை. இந்த நிலையில் அஜித் அகர்கர் மீண்டும் தேர்வுக் குழு தலைவர் பதவிக்கு விண்ணப்பித்தார். இதற்காக டெல்லி துணை பயிற்சியாளர் பதவியில் இருந்தும் அஜித் அகர்கர் விலகினார்.

இந்த நிலையில் இன்றுடன் பிசிசிஐ தேர்வுக் குழு தலைவர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான நேரம் முடிவடைந்தது. இதனால் நாளை நேர்காணல் முடிவடைந்த பின், அஜித் அகர்கர் தேர்வுக் குழு தலைவராக நியமிக்கப்படுவார் என்று தெரிய வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அஜித் அகர்கருக்கு ஊதியமும் உயர்த்தி வழங்கப்படும் என்று பிசிசிஐ உறுதி அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை