AUS vs SA, 3rd ODI: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் மிட்செல் மார்ஷ், டிராவிஸ் ஹெட், கேமரூன் க்ரீன் ஆகியோர் சதங்களை விளாசி அசத்தியுள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வந்த் தென் ஆப்பிரிக்க அணி தற்சமயம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதலிரண்டு போட்டியிலும் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்று தொடரை வென்றுள்ளது. இதையடுத்து ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா இடையேயான ஒருநாள் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று மெக்கேயில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்ஹிரேலியா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து தென் ஆப்பிரிக்காவை பந்துவீச அழைத்தது.
அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் மிட்செல் மார்ஷ், டிராவிஸ் ஹெட் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இப்போட்டியில் அபாரமாக விளையாடிய டிராவிஸ் ஹெட் சதமடித்து அசத்தியதுடன், 17 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் என 142 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தர். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கேமரூன் க்ரீனும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபக்கம் மிட்செல் மார்ஷும் தனது சதத்தைப் பூர்த்தி செய்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
பின் 6 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 100 ரன்களுக்கு மிட்செல் மார்ஷ் விக்கெட்டை இழந்தார். அடுத்து களமிறங்கிய அலெக்ஸ் கேரியும் அபாரமாக விளையாடினார். மேற்கொண்டு இந்த போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேமரூன் க்ரீன் சதமடித்ததுடன், 6 பவுண்டரி, 8 சிக்ஸர்கள் என 118 ரன்களையும், அலெக்ஸ் கேரி 50 ரன்களையும் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 431 ரன்களைக் குவித்தது. தென் ஆப்பிரிக்க தரப்பில் கேசவ் மஹாராஜ், செனுரன் முத்துசாமி தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. ஐடன் மார்க்ரம் 2 ரன்களிலும், ரியான் ரிக்கெல்டன் 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் இணைந்த டெம்பா பவுமா - டோனி டி ஸோர்ஸி இணை அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் இறங்கினர். ஆனால் இதில் பவுமா 19 ரன்களுக்கும், டோனி டி ஸோர்ஸி 33 ரன்களிலும் என ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஒரு ரன்னிலும், வியான் முல்டர் 5 ரன்னிலும், கார்பின் போஷ் 17 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமாளித்தனர்.
Also Read: LIVE Cricket Score
அதேசமயம் அதிரடியாக விளையாடிய டெவால்ட் பிரீவிஸ் 2 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 49 ரன்களை எடுத்திருந்த கையோடு விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதன்பின் களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவற தென் ஆப்பிரிக்க அணி 24.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 155 ரன்களில் ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலியா தரப்பில் கூப்பர் கன்னொலி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 276 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது.