ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வந்த வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டி20 போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கி தொடரையும் கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி  டி20 போட்டி பெர்த்தில் நடைபெற்று வருகிறது. 

Advertisement

அதன்படி இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஜான்சன் சார்லஸ் 4 ரன்களோடு பெவிலியன் திரும்ப, அவரைத் தொடர்ந்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரனும் ஒரு ரன்னுடன் விக்கெட்டை இழந்தார். அதன்பின் அதிரடியாக தொடங்கிய கைல் மேயர்ஸும் 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

Advertisement

இதையடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் ரோவ்மன் பாவெல் - ரோஸ்டன் சேஸ் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் கேப்டன் ரோவ்மன் பாவெல் 21 ரன்களோடு விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரோஸ்டன் சேஸ் 3 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 37 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

பின்னர் ஜோடி சேர்ந்த ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட் - ஆண்ட்ரே ரஸல் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன், அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இப்போட்டியில் ஆரம்பத்தில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரூதர்ஃபோர்ட் ஒரு கட்டத்திற்கு மேல் பவுண்டரியும் சிக்சர்களுமாக விளாசியதுடன் தனது முதல் சர்வதேச டி20 அரைசதத்தையும் பதிவுசெய்து மிரட்டினார். 

அவரைத்தொடர்ந்து சிக்சர்களாக விளாசித் தள்ளிய ஆண்ட்ரே ரஸல் 25 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதிலும் ஆடம் ஸாம்பா வீசிய 19ஆவது ஓவரை எதிர்கொண்ட ஆண்ட்ரே ரஸல் அந்த ஓவரில் மட்டும் 4 சிக்சர்கள், ஒரு பவுண்டரி என 28 ரன்களை விளாசி அரங்கத்தை அதிரவைத்தார். மேலும் இருவரும் இணைந்து 6ஆவது விக்கெட்டிற்கு 239 ரன்களைச் சேர்த்தனர்.

இப்போட்டியில் இறுதிவரை களத்தில் இருந்த ஆண்ட்ரே ரஸல் 4 பவுண்டரி, 7 சிக்சர்கள் என 71 ரன்களையும், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட் 5 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 67 ரன்களையும் குவித்தனர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 220 ரன்களை குவித்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அறிமுக வீரர் ஸேவியர் பார்ட்லெட் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

Advertisement

 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News