ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 13ஆவது பதிப்பானது இந்தியா மற்றும் இலங்கையில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 13ஆவது லீக் ஆட்டத்தில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணியை எதிர்த்து, அலிசா ஹீலி தலைமையிலான ஆஸ்திரேலிய மகளிர் அணி பலப்பரீட்சை நடத்தின. விசாகப்பட்டினத்தில் உள்ள ஏசிஏ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய இந்திய மகளிர் அணிக்கு பிரதிகா ராவல் மற்றும் ஸ்மிருதி மந்தனா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். தொடர்ந்து அபாரமாக விளையாடிய இருவரும் தங்களுடைய அரைசதங்களைப் பதிவு செய்து அசத்தியதுடன், முதல் விக்கெட்டிற்கு 155 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினார். அதன்பின், இந்த ஆட்டத்தில் இருவரும் சதமடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஸ்மிருதி மந்தனா 9 பவுண்டரிகள்,  3 சிக்ஸர்கள் என 80 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார்.

Advertisement

அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீராங்கனையான பிரதிகா ராவலும் 10 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 75 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் களமிறங்கிய வீராங்கனைகளில் ஹர்லீன் தியோல் 38 ரன்களையும், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 22 ரன்னிலும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 33 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்தனர். அதன்பின் வந்த ரிச்சா கோஷ் அதிரடியாக விளையாடி 3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 32 ரன்களையும், அமஞ்சோத் கவுர் 16 ரன்களையும் சேர்த்த நிலையில் மற்ற வீராங்கனைகள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

இதன் காரணமாக இந்திய மகளிர் அணி 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 330 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய மகளிர் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய அனபெல் சதர்லேண்ட் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் அலிசா ஹீலி - போப் லிட்ச்ஃபீல்ட் இணை அதிரடியான தொடக்கத்தை வழங்கினர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 85 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், லிட்ச்ஃபீல்ட் 40 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய எல்லிஸ் பெர்ரி காயம் காரணமாக பாதியிலேயே களத்தில் இருந்து வெளியேறிய நிலையில், அடுத்து வந்த பெத் மூனி 4 ரன்னிலும், அனபெல் சதர்லேண்ட் ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டுகளை இழந்தனர். அதேசமயம் மறுமுனையில் அதிரடியாக விளையாடிய அலிசா ஹீலி சதம் விளாசி அசத்தினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய அலிசா ஹீலி 21 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 142 ரன்களைச் சேர்த்த ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஆஷ்லே கார்ட்னர் 45 ரன்னிலும், தஹ்லியா மெக்ராத் 12 ரன்னிலும், சோஃபி மொலினக்ஸ் 18 ரன்னிலும் விக்கெட்டை இழந்தனர்.

Also Read: LIVE Cricket Score

பின்னர் மீண்டும் களமிறங்கிய எல்லிஸ் பெர்ரி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார். மேலும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பெர்ரி 5 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 47 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார். இதன் மூலம் ஆஸ்திரேலிய மகளிர் அணி 49 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவு செய்து அசத்தினார். இதன் மூலம் மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக இலக்கை சேஸ் செய்த அணி என்ற சாதனையையும் ஆஸ்திரேலியா படைத்துள்ளது.

Advertisement

About the Author

Tamil Editorial
Tamil Editorial Read More
Latest Cricket News