தந்தையின் சாதனையை சமன் செய்த பாஸ் டி லீட்!

Updated: Fri, Oct 06 2023 19:12 IST
Image Source: Google

உலகக் கோப்பைத் தொடரில் ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து, பாகிஸ்தான் முதலில் பேட் செய்தது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஃபகர் சமான் மற்றும் இமாம் உல் ஹக் களமிறங்கினர். ஃபகர் சமான் 12 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின், களமிறங்கிய கேப்டன் பாபர் அசாம் 5  ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். இமாம் உல் ஹக் 15 ரன்களில் ஆட்டமிழக்க பாகிஸ்தான் அணி 38 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதனையடுத்து, முகமது ரிஸ்வான் மற்றும் சௌத் ஷகீல் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அணியை சரிவிலிருந்து மீட்டது. சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். சௌத் ஷகீல் 68 ரன்கள், முகமது ரிஸ்வான் 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கியவர்களில் இஃப்திகார் அகமது 9, ஷதாப் கான் 32, முகமது நவாஸ் 39 எடுத்து ஆட்டமிழந்தனர்.

இறுதியில் பாகிஸ்தான் அணி 49 ஓவர்களின் முடிவில் 286 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. நெதர்லாந்து தரப்பில் சிறப்பாக பந்துவீசிய பாஸ் டி லீட் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். காலின் அக்கர்மேன் 2 விக்கெட்டுகளையும், ஆர்யன் தத், லோகன் வான் பீக், , பால் வான் மீகேரன் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். 

 

இந்நிலையில் இப்போட்டியில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம், ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் நெதர்லாந்து அணியின் இரண்டாவது சிறப்பான பந்துவீச்சைப் பதிவுசெய்த வீரர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார். முன்னதாக கடந்த 2003ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் போது இந்தியா அணிக்கெதிராக நெதர்லாந்தின் டிம் டி லீட் 35 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதே அந்த அணியின் சிறந்த பந்துவீச்சாக இருந்து வருகிறது.

இதில் ஆச்சரியபட வேண்டிய விஷயம் யாதெனில் டிம் டி லீட் - பாஸ் டி லீட் இருவரும் தந்தை மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமீப காலமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் பாஸ் டி லீட் நடப்பு உலகக்கோப்பை தொடரில் தனது தந்தையின் சாதனையை முறியடிப்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை