இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமில் நடைபெற்றி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணி ரிஷப் பந்தின் அதிரடியான சதத்தின் மூலம் முதல் நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்களைச் சேர்த்திருந்தது.
இதையடுத்து 2ஆவது நாளான இன்று முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்திய அணியக்கு ரவீந்திர ஜடேஜா 83 ரன்களுடனும், முகமது ஷமி ரன் ஏதுமின்றியும் ஆட்டத்தை தொடர்ந்தனர்.
இதில் சிறப்பாக விளையாடிய ஜடேஜா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது மூன்றாவது டெஸ்ட் சதத்தைப் பதிவுசெய்தார். மறுமுனையில் முகமது ஷமி 16 ரன்களில் ஆட்டமிழக்க, ஜடேஜா 104 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.
அடுத்து களமிறங்கிய கேப்டன் ஜஸ்ப்ரித் பும்ரா, ஸ்டூவர்ட் பிராட் ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரி, சிக்சர்களுமாக விளாசி 35 ரன்களைச் சேர்த்தார். இறுதியில் இந்திய அணி 84.5 ஓவர்களில் 416 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக ரிஷப் பந்த் 146 ரன்களும், ஜடேஜா 104 ரன்களும், பும்ரா 31 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி தொடக்க வீரர் அலெக்ஸ் லீஸ் 6 ரன்னும், சாக் கிராலி 9 ரன்னுக்கும் விக்கெட்டை பறிகொடுத்தனர். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஓல்லி போப் 10 ரன்னுடன் வெளியேறினார்.
இதற்கிடையில் இங்கிலாந்து 31 ரன்கள் எடுத்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. அதன்பின் தொடங்கிய ஆட்டத்தில் இங்கிலாந்தின் நம்பிக்கையாக திகழ்ந்த ஜோ ரூட்டை 31 ரன்கள் எடுத்த நிலையில் முகமது சிராஜிடம் விக்கெட்டை இழந்தார்.
அடுத்து களமிறங்கிய ஜேக் லீச்சும் ரன் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். இதனால் 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 84 ரன்களைச் சேர்த்து தடுமாறி வருகிறது.
இங்கிலாந்து தரப்பில் ஜானி பேர்ஸ்டோவ் 12 ரன்களுடனும், பென் ஸ்டோக்ஸ் ரன் ஏதுமின்றியும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் ஜஸ்ப்ரித் பும்ரா 3 விக்கெட்டுகளையும், முகமது ஷமி, முகமது சிராஜ் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர்.