ஜிம்பாப்வே - இந்திய அணிகளுக்கு இடையேயான 5ஆவது டி20 போட்டி இன்று ஹராரேவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 12 ரன்னிலும், அடுத்து களமிறங்கிய அபிஷேக் சர்மா 14 ரன்னிலும், ஷுப்மன் கில் 13 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் இந்திய அணி 43 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதன் பின்னர் ஜோடி சேர்ந்த சஞ்சு சாம்சன் - ரியான் பராக் சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ரியான் பராக் 22 ரன்னில் விக்கெட்டை இழக்க, நிதானமாக விளையாடிய சஞ்சு சாம்சன் அரைசதம் கடந்த கையோடு 58 ரன்களிலும், ஷிவம் தூபே 26 ரன்னிலும் விக்கெட்டை இழக்க, இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்களைக் குவித்தது.
இதனையடுத்து 168 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஜிம்பாப்வே அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியில் தியான் மேயர்ஸ் 34 ரன்களை அடித்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் யாரும் பெரிதளவில் சோபிக்கவில்லை. இதனால் ஜிம்பாப்வே அணி 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 125 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்திய அணி தரப்பில் முகேஷ் குமார் 4 விக்கெட்டும் சிவம் துபே 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் இந்திய அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 4 - 1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது. மேலும் இப்போட்டியின் ஆட்டநாயகனாக ஷிவம் தூபேவும், தொடர் நாயகனாக வாஷிங்டன் சுந்தரும் தேர்வு செய்யப்பட்டனர்.
இப்போட்டி முடிவுக்கு பிறகு பேசிய இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில், “இது எங்களுக்கு ஒரு சிறப்பான தொடராக அமைந்துள்ளது. முதல் போட்டியில் அடைந்த தோல்விக்குப் பிறகு நாங்கள் சிறப்பாக செயல்பட்டது பார்ப்பதற்கே அலாதியாக இருந்தது. ஏனெனில் இத்தொடரில் பங்கேற்ற சில வீரகளுக்கு இதுதான் முதல் தொட்ர். மேலும் அவர்கள் இதுபோன்ற மைதானங்களில் விளையாடி பழகவில்லை என்றாலும், இத்தொடரில் செயல்பட்ட விதம் சிறப்பாக இருந்தது.
இதனையடுத்து நாங்கள் அடுத்ததாக இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடவுள்ளோம். முன்னதாக இலங்கையில் கடந்தாண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் நான் விளையாடி இருக்கிறேன். அதனால் மீண்டும் இலங்கை சென்று விளையாட ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். இலங்கை தொடருக்கான இந்திய அணி இதுவரை அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.