T20 WC 2024: சிறந்த பிளேயிங் லெவனை அறிவித்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா; ரஷித் கானுக்கு கெப்டன் பொறுப்பு!

Updated: Sat, Jun 29 2024 12:30 IST
T20 WC 2024: சிறந்த பிளேயிங் லெவனை அறிவித்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா; ரஷித் கானுக்கு கெப்டன் பொறுப்பு! (Image Source: Google)

ஒன்பதாவது ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் முன்னாள் சாம்பியன் இந்திய அணியை எதிர்த்து தென் ஆப்பிரிக்க அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. பார்படாஸில் உள்ள கெனிங்ஸ்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். 

இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடருக்கான சிறந்த அணியை இன்று அறிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக இந்த அணியின் கேப்டனாக அஃப்கானிஸ்தானின் ரஷித் கானை நியமித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் சமீப காலங்களாகவே ஆஸ்திரேலியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே ஒருசில பிரச்சனைகள் நிலவி வருகின்றன.

அதிலும் குறிப்பாக தாலிபான்கள் ஆட்சியில் ஆஃப்கானிஸ்தானில் உள்ள பெண்களுக்கு சுதந்திரமில்லை என்பதை காரணம் காட்டி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமானது ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இருதரப்பு தொடர்களி விளையாடுவதை தவிர்த்து வருகிறது. மேற்கொண்டு ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ரஷித் கானும், ஆஸ்திரேலியாவின் டி20 தொடரான பிக் பேஷ் லீக்கில் பங்கேற்பதை தவிர்த்தார். 

இதனையடுத்து இரு அணிகளும் தற்சமயம் ஐசிசி தொடர்களில் விளையாடி வருகின்றனர். அந்தவகையில் நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இவ்விரு அணிகளும் மோதின. அதில் ஆஃப்கானிஸ்தான் அணியானது ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதுடன், அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தியது. அப்போது கூட ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ரஷித் கான், கிரிக்கெட் ஆஸ்திரேலியாவிடம் கிரிக்கெட்டை விளையாட்டாக மட்டும் பார்க்க வேண்டும் என கொரிக்கை வைத்திருந்தார்.

இந்நிலையில் தான் தற்போது கிரிக்கெட் ஆஸ்திரேலியா ரஷித் கானை நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரின் சிறந்த அணிக்கான கேப்டனாக அறிவித்துள்ளது. இது ஒருபக்கம் ரஷித் கானை பெருமைப்படுத்தும் விதமாக பார்க்கப்பட்டாலும், இரு அணிகளுக்கும் இடையேயான உரசல் காரணமாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா வேண்டுமென்றே ரஷித் கானை கேப்டனாக நியமித்து கேலி செய்துள்ளதாகவும் கருத்துகள் வருவது குறிப்பிடத்தக்கது. 

கிரிக்கெட் ஆஸ்திரேலியா தேர்வு செய்துள்ள சிறந்த அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா, டிராவிஸ் ஹெட் ஆகியோரையும், அடுத்த இடங்களில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் நிக்கோலஸ் பூரன், அமெரிக்க அணியின் ஆரோன் ஜோன்ஸ் ஆகியோரையும் தேர்வுசெய்யதுள்ளது,. மேலும் அணியின் ஆல் ரவுண்டர்களாக ஆஸ்திரேலியாவின் மார்கஸ் ஸ்டொய்னிஸ், இந்திய அணியின் ஹர்திக் பாண்டியா ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர். 

மேற்கொண்டு சுழற்பந்து வீச்சாளர்களாக ஆஃப்கானிஸ்தானின் ரஷித் கானும், வங்கதேச அணியின் ரிஷாத் ஹொசைனையும் தேர்வு செய்துள்ள கிரிக்கெட் ஆஸ்திரேலியா, வேகப்பந்து வீச்சாளர்களாக ஆஃப்கானிஸ்தானின் ஃபசல்ஹக் ஃபரூக்கி, தென் ஆப்பிரிக்காவின் ஆன்ரிச் நோர்ட்ஜே, இந்திய அணியின் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கியுள்ளது. அதேசமயம் இந்த அணியில் குல்தீப் யாதவ், அகீல் ஹொசைன் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

கிரிக்கெட் ஆஸ்திரேலியா தேர்வு செய்த டி20 உலகக்கோப்பை சிறந்த அணி: ரோஹித் சர்மா, டிராவிஸ் ஹெட், நிக்கோலஸ் பூரன், ஆரோன் ஜோன்ஸ், மார்கஸ் ஸ்டொய்னிஸ், ஹர்திக் பாண்டியா, ரஷித் கான் (கேப்டன்), ரிஷாத் ஹொசைன், ஃபசல்ஹக் ஃபரூக்கி, ஆன்ரிச் நோர்ட்ஜே, ஜஸ்ப்ரித் பும்ரா.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை