CWC 2023 Qualifiers: ஜிம்பாப்வேவின் உலகக்கோப்பை கனவை தகர்த்தது ஸ்காட்லாந்து!
ஜிம்பாப்வேவியில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற சூப்பர் 6 சுற்றின் 6ஆவது ஆட்டத்தில் ஜிம்பாப்வே - ஸ்காட்லந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. புலவாயோ நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீச தீர்மானித்து ஸ்காட்லாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய ஸ்காட்லாந்து அணிக்கு கிறிஸ்டோபர் மெக்பிரைட் - மேத்யூ கிராஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்தனர். பின் 28 ரன்களில் மெக்பிரைட் ஆட்டமிழக்க, 38 ரன்களுக்கு மேத்யூ கிராஸும் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய பிராண்டன் மெக்முல்லான் 34 ரன்களையும், ஜார்ஜ் முன்ஸி 31 ரன்களையும் சேர்த்தனர்.
அதன்பின் களமிறங்கிய மைக்கேல் லீஸ்க் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 48 ரன்களுக்கு ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் ஸ்காட்லாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 234 ரன்களை எடுத்தது. ஜிம்பாப்வே தரப்பில் சீன் வில்லியம்ஸ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. தொடக்க வீரர்கள் கும்பி மற்றும் கிரேக் எர்வின் ஆகியோரு சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். அதன்பின் களமிறங்கிய இன்னசெண்ட் கையா, சீன் வில்லியம்ஸ் ஆகியோரும் வந்த வேகத்தில் நடையைக் கட்ட ஜிம்பாப்வே அணி 37 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அப்போது ஜோடி சேர்ந்த சிக்கந்தர் ரஸா - ரியான் பர்ல் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் 34 ரன்களை எடுத்திருந்த ரஸா விக்கெட்டை இழக்க, மறுபக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரியான் பர்ல் அரைசதம் கடந்தார். அவருக்கு துணையாக விளையாடிய வெஸ்லி மதவெரேவும் 40 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.
பின் அணியின் நம்பிக்கையாக பார்க்கப்பட்ட ரியான் பர்ல் 83 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவறினர். இதனால் 41.1 ஓவர்களில் ஜிம்பாப்வே அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 203 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஸ்காட்லாந்து தர்பபில் கிறிஸ் சோல் 3 விக்கெட்டுகளையும், பிராண்டன் மெக்முல்லன், மைக்கேல் லீஸ்க் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதன்மூலம் ஸ்காட்லாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி, சூப்பர் சிக்ஸ் சுற்றில் 6 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. இத்தோல்வியின் மூலம் ஜிம்பாப்வே அணியின் உலகக்கோப்பை கனவும் சுக்குநூறானது. அதேசமயம் ஸ்காட்லாந்து அணிக்கு மீதம் ஒரு போட்டி உள்ளதால் அந்த அணியின் உலகக்கோப்பை வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.