IND vs AUS: காயம் காரணமாக தொடரிலிருந்து விலகினார் டேவிட் வார்னர்!

Updated: Tue, Feb 21 2023 12:21 IST
Image Source: Google

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் விளையாடியுள்ளார். இதில் இதுவரை நடைபெற்று முடிந்த முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.

இதில் டெல்லியில் நடைபெற்ற 2ஆவது டெஸ்டில் ஆஸ்திரேலிய தொடக்க வீரர் டேவிட் வார்னருக்குக் காயம் ஏற்பட்டது. முதல் இன்னிங்ஸில் விளையாடிய வார்னர், 15 ரன்களில் ஷமி பந்தில் ஆட்டமிழந்தார். சிராஜ் வீசிய பந்து, வார்னரின் தலைக்கவசத்தில் பட்டது. பிறகு சிராஜின் மற்றொரு பந்து, முழங்கையைத் தாக்கியது. இதனால் மைதானத்திலேயே வார்னருக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டது. 

அவர் ஆட்டமிழந்த பிறகு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் தேர்ச்சி அடையாததால் 2ஆவது டெஸ்டிலிருந்து வார்னர் விலகினார். வார்னருக்குப் பதிலாக ஆஸி. அணியில் மாற்று வீரராக ரென்ஷா சேர்க்கப்பட்டார். 2ஆவது இன்னிங்ஸில் அவர் தான் பேட்டிங் செய்தார்.

இந்நிலையில் முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து வார்னர் விலகியுள்ளார். சிகிச்சைக்காக உடனடியாகக் குடும்பத்தினருடன் சிட்னிக்குச் செல்லும் வார்னர், டெஸ்ட் தொடருக்குப் பிறகு நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதன் காரணமாக 3ஆவது டெஸ்டில் வார்னருக்குப் பதிலாக டிராவிஸ் ஹெட் தொடக்க வீரராகக் களமிறங்கவுள்ளார். டெஸ்ட் தொடரிலிருந்து வார்னர், ஹேசில்வுட் என முக்கிய வீரர்கள் விலகியிருப்பது ஆஸ்திரேலியாவுக்கு அணிக்குப் பின்னடைவை ஏற்படுத்துமா என்பது இனிமேல் தான் தெரிய வரும். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை