வெஸ்ட் இண்டீஸ் அணியானது தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது இன்று (ஜூலை 26) பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கிய. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது முதல் இன்னிங்ஸில் 282 ரன்கள் எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கிரேக் பிராத்வைட் 61 ரன்களையும், ஜேசன் ஹோல்டர் 59 ரன்களையும் எடுத்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் கஸ் அட்கின்சன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 38 ரன்களை மட்டுமே எடுத்து. இதையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை ஒல்லி போப் 6 ரன்களுடனும், ஜோ ரூட் 2 ரன்களுடனும் தொடர்ந்தனர். 

Advertisement

இதில் ஒல்லி போப் 10 ரன்களிலும் அடுத்து களமிறங்கிய ஹாரி ப்ரூக் 2 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் ஜோ ரூட்டுடன் இணைந்த கேப்டன் பென் ஸ்டோக்ஸும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. தொடர்ந்து அபாரமாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்ததுடன் 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். பின் 54 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பென் ஸ்டோக்ஸ் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 87 ரன்களில் ஜோ ரூட்டும் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

பின்னர் களமிறங்கிய ஜேமி ஸ்மித் - கிறிஸ் வோக்ஸ் ஆகியோரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி தங்கள் அரைசதங்களை பூர்த்தி செய்தனர். இதில் 12 பவுண்டரி, ஒரு சிஸ்கர் என 95 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜேமி ஸ்மித் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். அவரைத்தொடர்ந்து 62 ரன்களில் கிறிஸ் வோக்ஸும் ஆட்டமிழந்தார். இதன் காரணமாக இங்கிலாந்து அணி 376 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் அல்ஸாரி ஜோசப் 4 விக்கெட்டுகளையும், ஜெய்டன் சீல்ஸ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

அதன்பின் 94 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாம் இன்னிங்ஸைத் தொடர்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணியில் கேப்டன் பிராத்வைத் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய கிர்க் மெக்கன்ஸியும் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனால் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 33 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இதில் மைக்கேல் லூயிஸ் 18 ரன்களுடனும், அலிக் அதானாஸ் 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இதனையடுத்து 61 ரன்கள் பின் தங்கிய நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி நாளை மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளனர்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News