இதனை நான் தோனியிடம் இருந்து கற்றுக் கொண்டேன் - ஷிவம் தூபே!
இந்தியா - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றதுடன், டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை வகித்துள்ளது.
நேற்றைய போட்டியில் இந்திய அணியில் ஆல் ரவுண்டர் ஷிவம் தூபே பந்துவீச்சில் ஒரு விக்கெட்டை வீழ்த்தியதோடு, பேட்டிங்கி அரைசதம் கடந்து 5 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 60 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் இப்போட்டியின் ஆட்டநயாகன் விருதையும் ஷிவம் தூபே கைப்பற்றினர்.
இந்நிலையில் போட்டி முடிந்து பேசிய அவர், "இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது. எந்த வாய்ப்பையும் தவறவிடக் கூடாது என்பதில் நான் கவனமாக இருந்தேன். நான் பேட்டிங் செய்ய வந்த போது போட்டியை கடைசி வரை நின்று முடிக்க வேண்டும் என நினைத்தேன். அதை நான் தோனியிடம் இருந்து கற்றுக் கொண்டேன். நான் எப்போதும் தோனியுடன் பேசுவேன். அவர் ஒரு ஜாம்பவான். அவரை பார்த்தும், உற்று நோக்கியும் நிறைய கற்றுக் கொண்டு வருகிறேன்.
தோனி என் ஆட்டத்தை பற்றி சில விஷயங்களை எனக்கு கூறினார். அவர் எப்போதும் நான் எப்படி விளையாடுகிறேன் என்பது குறித்து என்னிடம் மதிப்பிட்டு கூறுவார். நான் நன்றாக ஆடுவதாக கூறுவார். அவர் என்னை மதிப்பிட்டால் அது எனக்கு அதிக தன்னம்பிக்கை அளிக்கும். அதனால் தான் எனது தன்னம்பிக்கை அளவு இப்போது அதிகமாக இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.