எனது தன்னம்பிக்கையை இந்த போட்டி அதிகமாக்கி இருக்கிறது - குல்தீப் யாதவ்!
இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்று 1-1 என்ற கணக்கில் சமனிலையில் இருந்தன.
இந்நிலையில் தொடரின் வெற்றியாளைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று டெல்லியிலுள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி ஒருநாள் தொடரை கைப்பற்றி சாதனை படைத்தது.
மேலும் நேற்றைய போட்டியில் இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் 18 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனால் அவர் ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.
போட்டி நிறைவுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஒருநாள் போட்டிகளில் விளையாடுவது மகிழ்ச்சியானது. எனது தன்னம்பிக்கையை இந்த போட்டி அதிகமாக்கி இருக்கிறது. ஐபிஎல் தொடரின் இந்த சீசன் எனது நம்பிக்கையை உயர்த்தியது. வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே மற்றும் இந்தியா-ஏ அணிக்காகவும் சிறப்பாக பந்து வீசினேன்.
நீங்கள் சில நேரங்களில் விக்கெட்டுகளைப் பெறுவீர்கள், சில நேரங்களில் நீங்கள் விக்கெட்டுகளைப் பெறுவதில்லை. இருப்பினும் என் நம்பிக்கை அதிகமாக உள்ளது. ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்படாதது எனக்கு ஏமாற்றத்தை அளிக்கவில்லை. தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய அணி சிறந்த ஒன்றாகும். எனது செயல்பாடுகளில் கவனம் செலுத்தி வரவிருக்கும் ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக செயல்படுவேன்” என்று தெரிவித்துள்ளார்