உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில். இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது டி20 போட்டி இன்று கௌகாத்தியில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு ருதுராஜ் கெய்வாட் - யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஜெய்ஸ்வால் 6 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய இஷான் கிஷான் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். இதையடுத்து ருதுராஜ் கெய்வாட்டுடன் இணைந்த கேப்டன் சூர்யகுமார் யாதம் தொடக்கத்தில் தடுமாறினாலும் பின்னர் வழக்கம்போல் தனது அதிரடியைக் கட்டினார். 

Advertisement

இப்போட்டியில் சூர்யகுமார் யாதவ் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 39 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் அதிரடி காட்டத்தொடங்கிய ருதுராஜ் கெய்வாட் 32 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அதன்பின் தொடர்ந்து பவுண்டரியும் சிக்சர்களுமாக விளாசித்தள்ளிய ருதுராஜ் கெய்க்வாட் 52 பந்துகளில் தனது முதல் சர்வதேச டி20 சதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார்.

அதன்பின்னும் அதிரடி காட்டிய ருதுராஜ் கெய்க்வாட் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 57 பந்துகளில் 13 பவுண்டரி, 7 சிக்சர்கள் என 123 ரன்களையும், திலக் வர்மா 31 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 222 ரன்களைச் சேர்த்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் கேன் ரிச்சர்ட்சன், ஜேசன் பெஹ்ரன்ராஃப், ஆரோன் ஹார்டி தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு டிராவிஸ் ஹெட் - ஆரோன் ஹார்டி இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். பின் 16 ரன்கள் எடுத்த நிலையில் ஆரோன் ஹார்டி விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஜோஷ் இங்லிஸும் 10 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். 

பின் அதிரடியாக விளையாடி வந்த டிராவிஸ் ஹெட் 35 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட, மறுபக்கம் வந்த மார்கஸ் ஸ்டொய்னிஸ் 17 ரன்களுக்கும், டிம் டேவிட் ரன்கள் ஏதுமின்றியும் என ஆட்டமிழந்தனர். இருப்பினும் மறுபக்கம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கிளென் மேக்ஸ்வெல் 28 பந்துகளில் அரைசதம் கடந்து அணியின் வெற்றிக்காக போராடினார்.

Advertisement

இருப்பினும் கடைசி 2 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி வெற்றிக்கு 43 ரன்கள் தேவை என்ற இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டது. அப்போது ஆட்டத்தின் 19ஆவது ஓவரை வீசிய அக்ஸர் படேலை அட்டாக் செய்த மேத்யூ வேட் அந்த ஓவரில் தனது பங்கிற்கு 18 ரன்களையும், கிளென் மேக்ஸ்வெல் 4 ரன்களையும் சேர்த்தனர். இதனால் கடைசி ஓவரில் ஆஸ்திரேலிய அணி வெற்றிக்கு 21 ரன்கள் தேவை என்ற நிலையில் ஆட்டத்தின் பரபரப்பும் எகிறியது. 

இருப்பினும் மறுபக்கம் பவுண்டரியும் சிக்சர்களுமாக விளாசிய கிளென் மேக்ஸ்வெல் 47 பந்துகளில் தனது சதத்தைப் பதிவுசெய்ததுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 48 பந்துகளில் 8 பவுண்டரி, 8 சிக்சர்கள் என 104 ரன்களையும், கேப்டன் மேத்யூ வேட் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என 28 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். 

இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் நீடிக்கிறது. இப்போட்டியில் சதமடித்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த கிளென் மேக்ஸ்வெல் ஆட்டநாயகனாகத் தேர்வுசெய்யப்பட்டார். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News