IND vs AUS, 3rd Test: சீட்டுக்கட்டாய் சரிந்த இந்தியா; பேட்டர்களை திணறவிடும் ஆஸி!
இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான 4 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நாக்பூர் மற்றும் டெல்லியில் நடந்த 2 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.
இந்த நிலையில், இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி இன்று முதல் இந்தூர் மைதானத்தில் நடக்கிறது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் கேஎல் ராகுலுக்கு பதிலாக சுப்மன் கில்லும், முகமது ஷமிக்கு பதிலாக உமேஷ் யாதவும் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்திய அணியில் தொடக்க வீரரர்களாக கேப்டன் ரோகித் – சுப்மன் கில் ஜோடி களமிறங்கினர். இதில், தலா 3 பவுண்டரியை விரட்டிய ரோகித் 12 ரன்னிலும், சுப்மன் கில் 21 ரன்னிலும் குன்னமேன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த புஜாரா ஒரு ரன்னிலும், ஜடேஜா 4 ரன்னிலும் நாதன் லையனிடம் விக்கெட்டை இழந்தனர்.
அதன்பின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் ரன்கள் ஏதுமின்றி சந்தித்த இரண்டாவது பந்திலேயே குன்னமென் பந்துவீச்சில் இன்சைட் எட்ஜ் முறையில் போல்டாகி பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதன்பின் ஜோடி சேர்ந்த் விராட் கோலி - கேஎஸ் பரத் இணை ஓரளவு தக்குப்பிடித்து சிறிதுநேரம் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினார்.
இதில் 52 பந்துகளை சந்தித்து நங்கூரம் போல் விளையாடிய வந்த விராட் கோலி 22 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் என 17 ரன்களைச் சேர்த்திருந்த கேஎஸ் பரத்து விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால் முதல்நாள் உணவு இடைவேளையின் போதே இந்திய அணி 84 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியுள்ளது.
இதில் ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு ரன்னுடனும், அக்ஸர் படேல் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய தரப்பில் மேத்யூ குன்னமென், நாதன் லையன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், டாட் மர்ஃபி ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர்.