பார்டர் கவாஸ்கர் கோப்பையின் நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் மார்ச் 9ஆம் தேதி தொடங்கியது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 255 ரன்களுக்கு நான்கு விக்கெட் களை இழந்திருந்தது.
அதன்பின் நேற்று நடைபெற்ற இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய ஆஸ்திரேலியா அணியில் உஸ்மான் கவாஜா மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோர் மிகச் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இதில் இருவரும் சதமடித்து அசத்தினர். இதன்மூலம் ஆஸ்திரேலியா அணி 480 ரன்கள் அவுட் ஆனது. இந்திய அணியின் பந்துவீச்சில் ரவிச்சந்திரன் அஸ்வின் சிறப்பாக பந்துவீசி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்தியா இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 36 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி இரண்டாவது நாள் ஆட்டத்தை முடித்தது இந்தியா. அதன்பின் இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தை கேப்டன் ரோஹித் சர்மா 17 ரன்களுடனும் சுப்மண் கில் 18 ரன்கள்டனும் தொடர்ந்தன்ர்.
இதில் அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 35 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். அதன்பின் கில்லுடன் இணைந்த புஜாரா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதேசமயம் சிறப்பாக விளையாடி வந்த ஷுப்மன் கில் அரைசதம் கடந்து அசத்தினார்.
தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஷுப்மன் கில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது இரண்டாவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய சட்டேஷ்வர் புஜாரா அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 42 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
இதியடுத்து ஷுப்மன் கில்லுடன் ஜோடி சேர்ந்த விராட் கோலியும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதில் 12 பவுண்டரி, ஒரு சிக்சர் என 128 ரன்களைச் சேர்த்திருந்த ஷுப்மன் கில் நாதன் லையன் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். ஆனால் இந்த தொடர் முழுவதும் சொதப்பிய விராட் கோலி இப்போட்டியில் அரைசதம் கடந்து தன்மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார்.
இதன்மூலம் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 289 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் விராட் கோலி 59 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 16 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இதையடுத்து 191 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்திய அணி நாளைய ஆட்டத்தை தொடரவுள்ளது.