ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி 5 போட்டிகளை உள்ளடக்கிய பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்துள்ள முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்ததுடன் 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்து அசத்தியுள்ளன. 

Advertisement

இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது பிரிஸ்பேனில் உள்ள காபா கிரிக்கெட் மைதானத்தில் டிசம்பர் 14ஆம் தேதி தொடங்கிய நிலையில், இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து ஆஸ்திரேலிய அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 445 ரன்களைக் குவித்து அசத்தியது. இதில் அதிகபட்சாமாக டிராவிஸ் ஹெட் 152 ரன்களையும், ஸ்டீவ் ஸ்மித் 101 ரன்களையும் சேர்த்தனர்.  

Advertisement

இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஜஸ்பிரித் பும்ரா ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 ரன்னிலும், ஷுப்மன் கில் ஒரு ரன்னிலும், விராட் கோலி 3 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். அவர்களைத் தொடர்ந்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பந்தும் 9 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய கேஎல் ராகுல் ஒரு பக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், மறுமுனையில் களமிறங்கிய் ரோஹித் சர்மாவும் 10 ரன்களில் அட்டமிழ்ந்தார். 

பின்னர் ராகுலுடன் இணைந்த ரவீந்திர ஜடேஜா பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் தங்கள் அரைசதங்களையும் கடந்தனர். இதில் இப்போட்டியில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேஎல் ராகுல் 8 பவுண்டரிகளுடன் 84 ரன்களை எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து நிதீஷ் ரெட்டி 16 ரன்னிலும், முகமது சிராஜ் ஒரு ரன்னிலும் என விக்கெட்டை இழந்த நிலையில், அரைசதம் கடந்திருந்த ஜடேஜவும் 77 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இறுதியில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஆகாஷ் தீப் இணை பொறுப்புடன் விளையாடியதுடன் கடைசி விக்கெட்டிற்கு 47 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 

இதன்மூலம் இந்திய அணி ஃபலோ ஆனைத் தவிர்த்தது. இறுதியில் 31 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆகாஷ் தீப் தனது விக்கெட்டை இழந்தார். இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 260 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் பாட் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து 185 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி வீரர்கள் அதிரடியாக விளையாடும் முயற்சியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

இதில் உஸ்மான் கவாஜா 8 ரன்னிலும், நாதன் மெக்ஸ்வீனி 4 ரன்னிலும், லபுஷாக்னே ஒரு ரன்னிலும், மிட்செல் மார்ஷ் 2 ரன்னிலும், ஸ்டீவ் ஸ்மித் 4 ரன்னிலும், டிராவிஸ் ஹெட் 17 ரன்னிலும், பாட் கம்மின்ஸ் 22 ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த அலெக்ஸ் கேரி 20 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்பிற்கு 89 ரன்களைச் சேர்த்து டிக்ளர் செய்வதாக அறிவித்தது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி இந்திய அணிக்கு 275 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. 

Advertisement

பின்னர் கடின இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கேஎல் ராகுல் அகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் தலா 4 ரன்களைச் சேர்த்த நிலையில் போதிய வெளிச்சமின்மை காரணமாக இப்போட்டி தடைபட்டது. அதன்பின் மழை குறுக்கிட்டதன் காரணமாக இப்போட்டியின் முடிவானது டிராவை நோக்கி சென்றது. இறுதியில் தொடர் மழை காரணமாக இந்த டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இப்போட்டியில் சதமடித்து அசத்திய டிராவிஸ் ஹெட் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News