ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 24ஆவது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி மோதியது. ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து களமிறங்கியது. 

Advertisement

இதையடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தொடக்கம் ஜோஸ் பட்லர் - யஷஸ்வி ஜெய்ஸ்வால் கொடுத்தனர். இதில் அதிரடியாக தொடங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 21 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் தடுமாற்றமான பேட்டிங்கை வெளிப்படுத்திய ஜோஸ் பட்லர் 10 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். இதனையடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் சஞ்சு சாம்சன் - ரியான் பராக் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

Advertisement

இதில் இருவரும் அரைசதம் கடக்க, 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 196 ரன்களைக் குவித்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 7 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 68 ரன்களையும், அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரியான் பராக் 3 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 76  ரன்களையும் சேர்த்தனர். குஜராத் அணி தரப்பில் ரஷித் கான், உமேஷ் யாதவ், மோஹித் சர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். 

இதையடுத்து கடின இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஷுப்மன் கில் - சாய் சுதர்ஷன் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 64 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என 35 ரன்களைச் சேர்த்திருந்த சாய் சுதர்ஷன் தனது விக்கெட்டை இழந்தார். 

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மேத்யூ வேட் 4 ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் சென் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் அந்த அணி 10.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 77 ரன்களை சேர்த்தது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கேப்டன் ஷுப்மன் கில் அணியை சரிவிலிருந்து மீட்டெடுக்கும் முறையில் இறங்கி வருகிறார். இந்நிலையில் இப்போட்டியில் ஷுப்மன் கில் 27 ரன்களை எடுத்த போது ஐபிஎல் தொடரில் தனது 3000 ரன்களை எட்டினார். 

இதன் மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் மிள இளம் வயதில் 3000 ரன்களை கடந்த வீரர் எனும் விராட் கோலியின் சாதனையை முறியடித்து ஷுப்மன் கில் புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் விராட் கோலி 26 வருடம், 186 நாள்களில் இந்த சாதனையைப் படைத்த நிலையில், ஷுப்மன் கில் 24 வருடம், 215 நாள்களில் 3000 ரன்களைச் சேர்த்து புதிய சாதனையை படைத்துள்ளார். 

Advertisement

மிக இளம் வயதில் 3000 ரன்கள் அடித்த வீரர்கள் (ஐபிஎல்)

  • ஷுப்மன் கில் - 24 வருடம், 215 நாள்கள்
  • விராட் கோலி - 26 வருடம், 186 நாள்கள்
  • சஞ்சு சாம்சன் - 26 வருடம், 326 நாள்கள்
  • சுரேஷ் ரெய்னா - 27 வருடம், 161 நாள்கள்
  • ரோஹித் சர்மா - 27 வருடம், 343 நாள்கள்

மேலும் ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிவேகமாக 3000 ரன்களை அடித்த நான்காவது வீரர் எனும் பெருமையையும் ஷுப்மன் கில் பெற்றுள்ளார். இப்பட்டியலில் கிறிஸ் கெயில் 75 இன்னிங்ஸில் 3000 ரன்களை எட்டியதே சாதனையாக இருந்து வரும் நிலையில், ஷுப்மன் கில் தனது 94ஆவது இன்னிங்ஸில் 3000 ரன்களை எட்டி இப்பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார். 

அதிவேகமாக 3000 ரன்களை அடித்த வீரர்கள் (ஐபிஎல்)

  • கிறிஸ் கெயில் - 74 இன்னிங்ஸ்
  • கேஎல் ராகுல்  - 80 இன்னிங்ஸ்
  • ஜோஸ் பட்லர் - 85 இன்னிங்ஸ்
  • ஷுப்மன் கில் - 94 இன்னிங்ஸ்
  • டேவிட் வார்னர் - 94 இன்னிங்ஸ்
  • ஃபாஃப் டூ பிளெசிஸ் - 94 இன்னிங்ஸ்
Advertisement

 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News