ஐபிஎல் 2025: கேப்பிட்டல்ஸுக்கு 205 ரன்களை இலக்காக நிர்ணயித்தது நைட் ரைடர்ஸ்!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 48ஆவது லீக் போட்டியில் அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து அஜிங்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தின.
டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய கேகேஆர் அணிக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் சுனில் நரைன் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இதில் அதிரடியான தொடக்கத்தைப் பெற்றிருந்த ரஹ்மனுல்லா குர்பாஸ் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 26 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான சுனில் நரைனும் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 27 ரன்களிலும், அணியின் கேப்டன் அஜிங்கியா ரஹானே 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 26 ரன்னிலும், வெங்கடேஷ் ஐயர் 7 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த அங்கிரிஷ் ரகுவன்ஷி - ரிங்கு சிங் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரகுவன்ஷி 3 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 44 ரன்னிலும், ரிங்கு சிங் 36 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர்.
Also Read: LIVE Cricket Score
இறுதியில் ஆண்ட்ரே ரஸல் மற்றும் ரோவ்மன் பாவேல் இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இதில் பாவெல் 5 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய அனுகுல் ராய் ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டை இழக்க, அதன்பின் 17 ரன்கள் எடுத்திருந்த கையோடு ஆண்ட்ரே ரஸலும் விக்கெட்டை இழந்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்களைச் சேர்த்தது. டெல்லி கேப்பிட்டல்ஸ் தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும், விப்ராஜ் நிகம் மற்றும் அக்ஸர் படேல் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.