தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் பதவியில் இருந்து ஜேபி டுமினி விலகல்!
தென் ஆப்பிரிக்க அணி தற்சமயம் இலங்கை அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது. இதையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.
இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா அணியானது சொந்த மண்ணில் பாகிஸ்தானுக்கு அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரிலும், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் டி20 தொடரான டிசம்பர் 10ஆம் தேதி முதலும், ஒருநாள் தொடர் டிசம்பர் 17அம் தேதி முதலும் நடைபெறவுள்ள நிலையில், டெஸ்ட் தொடரானது பாக்ஸிங் டேவான டிசம்பர் 26ஆம் தேதி முதலும் தொடங்கவுள்ளது.
இந்நிலையில் இத்தொடருக்கான பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது. அதேசமயம் பாகிஸ்தான் டி20 தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள டி20 அணியில் ஐடன் மார்க்ரம், மார்கோ ஜான்சென், கேசவ் மஹாராஜ், காகிசோ ரபாடா மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் உள்ளிட்ட வீரர்கள் இலங்கை டெஸ்ட் தொடரில் விளையாடி வருவதன் காரணமாக இடம்பிடிக்கவில்லை.
இதன் காரணமாக தென் ஆப்பிரிக்க டி20 அணியின் கேப்டனாக ஹென்ரிச் கிளாசென் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தென் ஆப்பிரிக்க அணியின் பேட்டிங் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த முன்னாள் வீரர் ஜேபி டுமினி தனிப்பட்ட காரணங்களால் தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதனை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியமும் அதிகாரப்பூர்வமாக உறுதிசெய்துள்ளது.
இதுகுறித்து தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தனிப்பட்ட காரணங்களின் அடிப்படையில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பதவியில் இருந்து ஜேபி டுமினி உடனடியக விலகியுள்ளார்” என்று கூறியுள்ளது. முன்னதாக கடந்தாண்டு ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு முன்னர் தென் அப்பிரிக்க அணியின் பேட்டிங் பயிற்சியாளராக ஜேபி டுமினி நியமிக்கப்பட்டார்.
Also Read: Funding To Save Test Cricket
அவரது தலைமையின் கீழ் தென் ஆப்பிரிக்க அணியானது ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிச்சுற்றுக்கும், அதனைத்தொடர்ந்து இந்தாண்டு நடைபெற்ற ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியது. இந்நிலையில் தற்சமயம் அவர் தனது பதவியில் இருந்து விலகியுள்ளது தென் ஆப்பிரிக்க அணிக்கு பின்னடவை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.