ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தின. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியின் டாஸ் நிகழ்வானது மழை காரணமாக தாமதமானது. இதையடுத்து தலா 16 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீசுவதாக அறிவித்து கேகேஆர் அணியை பேட்டிங் செய்ய அழைத்தார்.

Advertisement

அதன்படி களமிறங்கிய கேகேஆர் அணிக்கு பில் சால்ட் - சுனில் நரைன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பில் சால்ட் முதல் பந்திலேயே சிக்ஸர் விளாசி தொடக்கம் கொடுத்தார்.  அதன்பின் 6 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் சால்ட் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் இன்னிங்ஸின் இரண்டாவது ஓவரை ஜஸ்ப்ரித் பும்ரா வீச அதனை எதிர்கொண்ட சுனில் நரைன் பந்துவீட்டு விளையாட நினைத்தார். ஆனால் அந்த பந்தானது கடைசி நொடியில் இன்ஸ்விங்காகி ஸ்டம்புகளை பதம் பார்த்தது. இதனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சுனில் நரைன் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.

Advertisement

அடுத்து களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரும் 7 ரன்களில் நடையைக் கட்டினார். பின்னர் இணைந்த வெங்கடேஷ் ஐயர் - நிதீஷ் ரானா இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் வெங்கடேஷ் ஐயர் 42 ரன்களிலும், நிதீஷ் ரானா 33 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இறுதியில் ஆண்ட்ரே ரஸல் 24, ரிங்கு சிங் 20, ரமந்தீப் சிங் 17 ரன்களைச் சேர்க்க கேகேஆர் அணி 16 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்களைச் சேர்த்தது. மும்பை அணி தரப்பில் பியூஷ் சாவ்லா, ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

இந்நிலையில் இப்போட்டியில் சுனில் நரைன் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்ததன் மூலம் மோசமான சாதனையை படைத்துள்ளார். அதன்படி டி20 கிரிக்கெட்டில் 44 முறை டக் அவுட்டாகி அதிகமுறை டக் அவுட்டான வீரர் எனும் மோசமான சாதனையை சுனில் நரைன் படைத்துள்ளார். இந்த பட்டியலில் இங்கிலாந்தின் அலெக்ஸ் ஹேல்ஸ் 43 முறை டக் அவுட்டாகி இரண்டாம் இடத்திலும், ஆஃப்கானிஸ்தானின் ரஷித் கான் 42 முறை டக் அவுட்டாகி மூன்றாம் இடத்திலும் உள்ளனர். மேலும் ஐபிஎல் தொடரில் சுனில் நரை 16ஆவது முறையாக டக் அவுட்டாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

டி20 கிரிக்கெட்டில் அதிக முறை டக் அவுட் ஆன வீரர்கள்

  • 44- சுனில் நரைன் (வெஸ்ட் இண்டீஸ்)
  • 43 - அலெக்ஸ் ஹெல்ஸ் (இங்கிலாந்து) 
  • 42- ரஷித் கான் (ஆஃப்கானிஸ்தான்)
  • 32 - பால் ஸ்டெர்லிங்  (அயர்லாந்து)
  • 31-கிளென் மேக்ஸ்வெல் (ஆஸ்திரேலியா)
  • 31 - ஜேசன் ராய் (இங்கிலாந்து)

ஐபிஎல் தொடரில் அதிக முறை டக் அவுட் ஆன வீரர்கள்

  • 17- தினேஷ் கார்த்திக்
  • 17- கிளென் மேக்ஸ்வெல்
  • 17- ரோஹித் சர்மா
  • 16- பியூஷ் சாவ்லா
  • 16- சுனில் நாராயண்
Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News