ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இன்னும் மூன்று தினங்களில் கோலாகலமாக தொடங்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இத்தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

Advertisement

முன்னதாக  இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணியின் நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் காயம் காரணமாக விலகினார். அதன்பின் காயத்திலிருந்து மீளாத கேஎல் ராகுல் இங்கிலாந்து தொடரிலிருந்து முற்றிலுமாக விலகினார். இதனையடுத்து அவர் மேற்சிகிச்சைகாக லண்டன் சென்று சிகிச்சைப் பெற்றார். 

Advertisement

அதன்பின் சிகிச்சை முடிந்து இந்தியா திரும்பிய கேஎல் ராகுல், பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட அகாடமியில் இணைந்து தனது உடற்தகுதியை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுவந்தார். இதன் காரணமாக அவர் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா என்ற சந்தேகங்கள் எழுந்தன. ஏனெனில் ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டுவரும் கேஎல் ராகுல், கடந்த ஐபிஎல் சீசனில் காயம் காரணமாக பாதியிலேயே விலகினார். 

மேலும் நடப்பு ஐபிஎல் தொடரில் அவர் முழுநேரமாக அணியின் கேப்டனாக செயல்படவுள்ளதால் அவரது பங்களிப்பு அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுவருகிறது. இந்நிலையில் தற்போது கேஎல் ராகுல் உடல்தகுதியை எட்டி விட்டதாகவும், ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனாக இணையவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் அவர் சில காலங்களுக்கு விக்கெட் கீப்பிங் செய்வதை தவிர்க்கவும் என என்சிஏ தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. 

இதன் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் சில போட்டிகளில் கேஎல் ராகுல் ஒரு பேட்டராக மட்டுமே செயல்படுவார் என கூறப்படுகிறது. முன்னதாக நடப்பு ஐபிஎல் தொடருக்கான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் துணைக்கேப்டனாக நிக்கோலஸ் பூரன் நியமிக்கப்பட்டார். இதன்முலம் நடப்பு சீசனில் நிக்கோலஸ் பூரனே அணியின் விக்கெட் கீப்பராக செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ அணி தங்களது முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News