ரஞ்சி கோப்பை அணியில் இணைந்த விராட் கோலி, ரிஷப் பந்த், ஷுப்மன் கில்!
இந்திய அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் இந்திய அணியின் பேட்டிங் யூனிட் மொத்தமாக சொதப்பியதன் காரணமாக இந்த தொடரை 3-1 என்ற கணக்கில் இந்திய அணி இத்தொடரை இழந்துள்ளதுடன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பையும் தவறவிட்டது.
இந்த படுமோசமான தோல்வியின் காரணமாக அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர், கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஷுப்மன் கில் உள்ளிட்டோர் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. அதுமட்டுமில்லாமல் இந்த தொடரில் பேட்டர்கள் சொதப்பியதற்கு காரணம் அவர்கள் உள்ளூர் போட்டிகளை தவிர்த்து வருவது தான் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து சமீபத்தில் பிசிசிஐ பொதுக்குழு கூட்டம் மும்பையில் நடைபெற்றது.
அக்கூட்டத்தின் முடிவில் பல்வேறு முடிவுகளை பிசிசிஐ அடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதில், இந்திய அணி வீரர்கள் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என்பதை கட்டாயமாக்கியதாக கூறப்பட்டது. இதனையடுத்து இன்றைய தினம் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா மும்பை ரஞ்சி கோப்பை அணியுடன் இணைந்து பயிற்சிகளை தொடர்ந்தார். இதனால் ரஞ்சி கோப்பை தொடரின் எஞ்சிய போட்டிகளில் அவர் விளையாடுவார் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, ரிஷப் பந்த் ஆகியோர் டெல்லி ரஞ்சி அணியிலும், ஷுப்மன் கில் பஞ்சாப் ரஞ்சி அணியில் இணைந்துள்ளனர். அதன்படி, இந்தியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன்களான விராட் கோலி மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் ரஞ்சி டிராபியின் கடைசி இரண்டு போட்டிகளுக்கான டெல்லி அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேசமயம் கர்நாடகா அணிக்கு எதிரான போட்டியில் விளையாடும் பஞ்சாப் அணியில் ஷுப்மன் கில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் டெல்லி கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விராட் கோலி மற்றும் ரிஷப் பந்த் எங்கள் அணியின் நட்சத்திர வீரர்கள், அவர்கள் டெல்லிக்காக விளையாட மிகவும் வரவேற்கப்படுகிறார்கள், ஆனால் அவர்களின் பணிச்சுமை காரணமாக தேசிய கிரிக்கெட் அகாடமி மற்றும் இந்திய அணி நிர்வாகத்திடமிருந்து அவர்கள் பெறும் அனைத்து பரிந்துரைகளையும் நாம் பார்க்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.
முன்னதாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடரில் விராட் கோலி ஒரு சதம் உள்பட், 190 ரன்களையும், ரிஷப் பந்த் ஒரு அரைசதம் உட்பட 255 ரன்களையும் மட்டுமே எடுத்தனர். இதனால் அவர்கள் மீது கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டதுடன், அவர்கள் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்து வந்தது. மேலும் சிட்னி டெஸ்ட் போட்டிக்கு பிறகு இந்திய தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரும் இதனையே வலியுறுத்தினார்.
இதன் காரணமாகவே தற்சமயம் இந்திய அணியின் முன்னணி வீரர்கள் உள்ளூர் போட்டிகளுக்கான தங்கள் சொத மாநில அணிகளில் இணைந்துள்ளனர். 2024-25ஆம் ஆண்டிற்கான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் இதுவரை 5 சுற்றுகள் முடிவடைந்துள்ள நிலையில், அடுத்த சுற்று போட்டிகள் ஜனவரி 23ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read: Funding To Save Test Cricket