இலங்கையில் நடைபெற்று வரும் லங்கா பிரீமியர் லீக்(Lanka Premier League) தொடரின் 5ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 7ஆவது லீக் ஆட்டத்தில் கண்டி ஃபால்கன்ஸ் அணியை எதிர்த்து கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ் - ஏஞ்சலோ பெரேரா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து, அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். 

Advertisement

இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 53 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் குர்பாஸ் 20 ரன்களில் ஆட்டமிழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஏஞ்சலோ பெரேராவும் 38 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய கிளென் பிலிப்ஸ் ஒருபக்கம் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். அதேசமயம் மறுபக்கம் களமிறங்கிய சமரவிக்ரமா, துனித் வெல்லலாகே, கேப்டன் திசாரா பெரேரா ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். 

Advertisement

இருப்பினும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கிளென் பிலிப்ஸ் அரைசதம் கடந்துடன், 6 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 70 ரன்களைக் குவித்து விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய வீரர்களில் ஷதாப் கான் 23 ரன்களையும், கருணரத்னே 13 ரன்களையும் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணியானது 9 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்களைச் சேர்த்தது. கண்டி ஃபால்கன்ஸ் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய துஷ்மந்தா சமீரா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

அதன்பின் கடின இலக்கை நோக்கி விளையாடிய ஃபால்கன்ஸ் அணிக்கு தினேஷ் சண்டிமல் - ஆண்ட்ரே ஃபிளெட்சர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் தினேஷ் சண்டிமல் 12 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். பின்னர் ஃபிளெட்சருடன் இணைந்த முகமது ஹாரிஸும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 95 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் அரைசதத்தை நெருங்கிய ஆண்ட்ரே ஃபிளெட்சர் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 47 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

அதன்பின் அரைசதம் கடந்த முகமது ஹாரிஸும் 5 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 56 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். இதனையடுத்து ஜோடி சேர்ந்த கமிந்து மெண்டிஸ் - ஏஞ்சலோ மேத்யூஸ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். இதில் கமிந்து மெண்டிஸ் 2 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் 36 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய தசுன் ஷனகா, கேப்டன் வநிந்து ஹசரங்கா ஆகியோர் ரன்கள் ஏதுமின்றியும், அடுத்து களமிறங்கிய சதுரங்கா டி சில்வா 3 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். 

அதேசமயம் இறுதிவரை களத்தில் இருந்த ஏஞ்சலோ மேதியூஸ் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 33 ரன்களை எடுத்த நிலையில் கடைசி பந்தில் ரன் அவுட்டானார். இதனால் கண்டி ஃபால்கன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 197 ரன்களை மட்டுமே சேர்த்தது. ஸ்டிரைக்கர்ஸ் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய மதிஷா பதிரானா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் கண்டி ஃபால்கன்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News