பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 10ஆவது சீசன் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதில் நேற்று நடைபெற்ற 3ஆவடு லீக் போட்டியில் கராச்சி கிங்ஸ் மற்றும் முல்தான் சுல்தான்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கராச்சியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கராச்சி கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

Advertisement

இதனையடுத்து களமிறங்கிய முல்தான் சுல்தான்ஸ் அணிக்கு கேப்டன் முகமது ரிஸ்வான் - ஷாய் ஹோப் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ரிஸ்வான் ஒருபக்கம் அதிரடியாக விளையாடிய நிலையில், மறுபக்கம் ஷாய் ஹோப் 8 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய உஸ்மான் கான் 16 ரன்களிலும், அடுத்து களமிறங்கி அதிரடியாக விளையாடிய காம்ரன் குலாம் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 36 ரன்களிலும் என ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ரிஸ்வானுடன் இணைந்த மைக்கேல் பிரேஸ்வெல் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். 

Advertisement

இப்போட்டியில் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய முகமது ரிஸ்வான் சதமடித்து மிரட்டினார். மேற்கொண்டு இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த முகமது ரிஸ்வான் 9 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் என 105 ரன்களையும், அவருடன் இணைந்த மைக்கேல் பிரேஸ்வெல் 5 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 44 ரன்களையும் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் முல்தான் சுல்தான்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 234 ரன்களைச் சேர்த்தது. கராச்சி தரப்பில் ஹசன் அலி, குஷ்தீல் ஷா, அப்பாஸ் அஃப்ரிடி தலா ஒரு விக்கெடை வீழ்த்தினார். 

அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய கராச்சி கிங்ஸ் அணிக்கு கேப்டன் டேவிட் வார்னர் - டிம் செஃபெர்ட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் வார்னர் 12 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த டிம் செஃபெர்டும் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 32 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஜேம்ஸ் வின்ஸ் ஒரு பக்கம் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்திய நிலையில், மறுமுனையில் விளையாடிய ஷான் மசூத், அஃப்ராத் மின்ஹாஸ் ஆகியோர் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர்.

பின்னர் இணைந்த வின்ஸ் - குஷ்தில் ஷா இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இதில் ஜேம்ஸ் வின்ஸ் சதமடித்து அசத்திய நிலையில் 14 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 101 ரன்களிலும், குஷ்தில் ஷா அரைசதம் கடந்ததுடன் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 60 ரன்களிலும் ஆட்டமிழந்தாலும் அணியின் வெற்றியை உறுதிசெய்தனர். இதன்மூலம் கராச்சி கிங்ஸ் அணியானது 19.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் முல்தான் சுல்தான்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது. இப்போட்டியில் அணியின் வெற்றிக்கு உதவிய ஜேம்ஸ் வின்ஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News