விராட் கோலியைப் பின்பற்றியே ரோஹித் செயல்படுகிறார் - கௌதம் கம்பீர்!

Updated: Tue, Feb 21 2023 11:57 IST
'Rohit is following Kohli's template': Gambhir! (Image Source: Google)

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் ஆஸ்திரேலிய அணி, கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. அதன்படி, தற்போது இவ்விரு அணிகளுக்கு இடையே பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் டிராபி நடைபெற்று வருகிறது. 4 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய 2-0 என்ற கணக்கில் வெற்றிபெற்று முன்னிலை வகிக்கிறது. மேலும், இந்தத் தொடரின் வெற்றி புள்ளிகளின் சதவிகிதமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்றில் பங்கேற்க இருக்கும் அணிகளையும் தீர்மானிக்க இருக்கிறது.

இந்த நிலையில், ரோஹித் சர்மா சிறந்த கேப்டன் என்றாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி உருவாக்கிய அணியை வைத்துத்தான் வெற்றிகரமாக செயல்படுகிறார் என முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “உண்மையைச் சொல்ல வேண்டுமெனில் ரோஹித் சர்மா சிறந்த கேப்டன் என்பதை நான் உறுதியாக ஒப்புக்கொள்வேன். என்றாலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோருடைய கேப்டன்ஷிப்பில் பெரிய வித்தியாசமில்லை. காரணம், விராட் கோலிதான் இந்த டெம்ப்ளேட்டை உருவாக்கினார். என்னைப் பொறுத்தவரை, டெஸ்ட் அணியை விராட் கோலியே சிறப்பாக வழிநடத்தினார்.

கோலியின் டெம்ப்ளேட்டைத்தான் ரோஹித் சர்மா பின்பற்றி வருகிறார். அப்படி பார்த்தோமெனில், ரோஹித் சர்மா தனக்கென எந்த ஒரு புதிய டெம்ப்ளேட்டையும் உருவாக்கவில்லை. முக்கியமாக டெஸ்ட் போட்டியில் அஸ்வின் மற்றும் ஜடேஜாவை விராட் கோலி எப்படி பயன்படுத்தினாரோ, அதே செயலைத்தான் ரோஹித்தும் கடைப்பிடிக்கிறார். அதனால், இந்திய மண்ணில் ரோஹித்தின் கேப்டன்ஷிப் செயல்பாடுகளில் எந்த வித்தியாசமும் இல்லை.

அதேநேரத்தில், அவருக்கு வெளிநாடுகளில் சவால் காத்திருக்கிறது. ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய வெளிநாடுகளுக்கு செல்லும்போதுதான் ரோஹித் சர்மாவுக்கு கேப்டனாய் மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது. ஆனால், வெளிநாட்டு மண்ணில்கூட விராட் கோலி வெற்றிகரமாக செயல்பட்டுள்ளார். முகமது ஷமி, சிராஜ், பும்ரா, அஸ்வின், ஜடேஜா, அக்சர் படேல் ஆகியோர் அடங்கிய இந்த அணியை விராட் கோலிதான் உருவாக்கினார். அதனாலேயே அவர் வெற்றிகரமாக செயல்பட்டார்” எனத் தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை