இந்திய அணி தற்சமயம் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் அடங்கிய டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று வரும் டி20 தொடரின் முதலிரண்டு போட்டிகளில் முடிவில் இந்திய அணி இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை நடைபெறவுள்ளது.
இதில் ஏற்கெனவே இலங்கை அணி தொடரை இழந்துள்ளதால், இப்போட்டியில் வெற்றிபெற்று ஆறுதலை தேடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் இப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி விளையாடும் என்பதால் நிச்சயம் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போட்டிக்காக இரு அணிகளும் தயாராகி வருகின்றனர்.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது ஆகஸ்ட் 02ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. முன்னதாக இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் சஞ்சு சாம்சனிற்கு வாய்ப்பு மறுபக்கபட்டு ரிஷப் பந்த், ரியான் பராக், ஷிவம் தூபே போன்ற வீரர்களுக்கு பிசிசிஐ வாய்ப்பு கொடுத்துள்ளது. மேற்கொண்டு கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரும் ஒருநாள் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் ஒருநாள் தொடரில் இருந்து ஓய்வளிக்கும் படி கேட்டிருந்த ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோரும் தங்கள் முடிவிலிருந்து பின் வாங்கி இத்தொடரில் விளையாடவுள்ளனர். இந்நிலையில் ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட வீரர்கள் இன்றைய தினம் இலங்கை சென்றடைந்துள்ளனர். மேற்கொண்டு அவர்கள் இன்று முதல் தங்கள் பயிற்சியை மேற்கொள்வார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளன.
இந்திய ஒருநாள் அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பந்த், ஸ்ரேயாஸ் ஐயர், ஷிவம் துபே, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், ரியான் பராக், அக்ஸர் படேல், கலீல் அகமது, ஹர்ஷித் ராணா.
இந்தியா - இலங்கை ஒருநாள் தொடர் அட்டவணை
- முதல் ஒருநாள் போட்டி - ஆகஸ்ட் 02 - கொழும்பு
- இரண்டாவது ஒருநாள் போட்டி - ஆகஸ்ட் 04 - கொழும்பு
- மூன்றாவது ஒருநாள் போட்டி - ஆகஸ்ட் 07 - கொழும்பு